பழங்குடி மாணவர்களுக்கான ஏகலவ்ய மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையை மையப்படுத்தியதால், ஊழியர்களிடமிருந்து பணி மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. current affairs tamil eklavya schools
இந்த மைய்யப்படுத்துதலின்போது, ஏகலவ்ய பள்ளி ஊழியர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஹிந்தி மொழி தெரிந்திருப்பது கட்டாயம் என்ற ஒரு புதிய விதி சேர்க்கப்பட்டது.
இதனால், ஹிந்தி மொழிப் பேசும் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் பெரும்பாலும் தெற்கில் உள்ள ஏகலவ்யப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். current affairs tamil eklavya schools
தெற்கில் உள்ள மாநிலங்களின் கலாச்சாரம், உணவு, மொழி போன்றவை அவர்களுக்கு அன்னியமாக இருப்பதால், பலரும் பணியிடமாற்றம் கோரி ஒன்றிய அரசுக்குத் தற்போது விண்ணப்பித்துள்ளனர்.
உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரம் அறியாத ஆசிரியர்கள் பழங்குடி மாணவர்களுக்குக் கல்வி சொல்லிக்கொடுப்பது எதிர்பார்க்காத பாதிப்புகளை உருவாக்கும் என்பதை ஒன்றிய அரசின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள்.
கடந்த ஆண்டுவரை அந்தந்த மாநிலங்கள்தான் ஏகலவ்யப் பள்ளிக்கான ஊழியர்களைத் தேர்வுசெய்துவந்தார்கள்.
2023 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இனி நானூற்றுக்கும் மேற்பட்ட ஏகலவ்யப் பள்ளிகளுக்குத் தேவைப்பட்ட 38,000 பணிகளுக்கான தேர்வு முறையை, பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (National Education Society for Tribal Students) பார்த்துக்கொள்ளும் என அறிவித்தார்.
மேற்குறிப்பிட்ட முடிவு, இந்தப் பள்ளிகளில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரி பண்ணுவதற்காகவும், தேர்வு முறையின் தரத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரி அமைக்கக் கொண்டுவரப்பட்டது என்று இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இந்தி மொழி கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட விதியால், முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4000 ஊழியர்கள் பெரும்பாலும் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இது தான் இத்துணை பணியிடமாற்றம் விண்ணப்பங்கள் வந்ததற்கான காரணம்.
இந்த விவகாரத்தினால், பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் தனது இணையத்தளத்தில் “தற்போது பணியிடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது” என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்விச் சங்கம் கூடியவிரைவில் பணியிடமாற்றக் கொள்கை ஒன்றை அறிவிப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஏகலவ்ய மாதிரி உறைவிடப் பள்ளிகள்:
- 1997-98 இல் இப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
- இவை பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
- சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தினைப் பின்பற்றும் இந்தப் பள்ளிகளின் நோக்கம், பழங்குடியின சிறுவர்களுக்குத் தரமான கல்வி வழங்குவதுதான்.
- ஒவ்வொரு பள்ளியிலும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 480 மாணவர்கள் தங்கிப் படிக்கமுடியும்.
- மேலும், ஐம்பது சதவீதத்திற்கும் மேலான பழங்குடிகள் மற்றும் குறைந்தபட்சம் 20,000 பழங்குடியினர் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும், ஓர் ஏகலவ்ய மாதிரி உறைவிடப் பள்ளி இருக்கும் எனப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- அரசாங்க கொள்கைகள் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த விருந்தாளி !
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்!!!
பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமரின் சந்திப்பு !