மேற்கு வங்காள அரசு, ஒன்றிய அரசு கூட்டாட்சி கொள்கையை மீறிவிட்டதாக, சிபிஐக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஏற்புடையதுதான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. current affairs tamil CBI
சிபிஐ சுதந்திரமாகச் செயல்படும் நிறுவனம், அதை நாங்கள் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை, அதனால் இந்த வழக்கில் தங்களை ஒரு பிரதிவாதியாக இணைத்தது தவறு என்று ஒன்றிய அரசு முதல்கட்டமாகக் கூறியுள்ளது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மெஹ்தா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, சிபிஐ-யை உருவாக்கிய தில்லி சிறப்பு காவல்துறை சட்டத்தை உருவாக்கியது ஒன்றிய அரசாங்கம்தான். அதனால் இந்த வாதத்தை ஏற்க முடியாது என்று தனது தீர்ப்பில் சொன்னது. current affairs tamil CBI
மேலும் ஒன்றியத்தால் குற்றங்கள் என்று அறிவிக்கப்பட்ட செயல்களை மட்டும்தான் சிபிஐயால் விசாரிக்க முடியும் என்று சொன்னது.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, ஒன்றிய அரசு சார்பாக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா, சிபிஐ ஒன்றும் ‘ஒன்றிய அரசாங்கம்’ கிடையாது அதனால் அதை இந்த வழக்கில் இணைத்ததும் தவறு என்று வாதாடினார்.
மேற்கு வங்காளத்திற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல், “சிபிஐ ஒன்றிய அரசாங்கத்தின் உத்தரவுப்படிதான் செயல்படுகிறது. மேற்கு வங்காளம், சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை நவம்பர் 18, 2018 இல் திரும்ப பெற்றுவிட்டது. அப்படி இருந்தும், சிபிஐ பன்னிரண்டு வழக்குகளை மேற்கு வங்காளத்தில் பதிவு பண்ணியிருக்கிறது.” என்று வாதாடினார்.
சிபிஐ (Central Bureau of Investigation) உருவான வரலாறு:
- 1941 ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், சிறப்புக் காவல்துறை என்று ஒரு துறையை, ஊழல் குற்றங்களை விசாரிக்க உருவாக்கியது.
- பின்னால், அந்தத் துறை, இந்திய அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் குற்றங்களை விசாரிக்கும் நிறுவனமாக தில்லி சிறப்புக் காவல்துறை சட்டம், 1946 (Delhi Special Police Establishment Act, 1946) மூலம் மாற்றப்பட்டது.
- ஊழலைத் தடுப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க அமைக்கப்பட்ட சந்தானம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 1963 ஆண்டு சிபிஐ என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
- இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு அல்ல. தில்லி சிறப்புக் காவல்துறை சட்டம் தான் இதற்கு தேவையான அதிகாரங்களை வழங்குகிறது.
இயக்குநர் நியமனம்:
- ஒன்றிய உள்துறை அமைச்சகம், தகுதியுள்ள நபர்களின் பட்டியலைத் தயாரித்து,பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறைக்கு அனுப்பும். அதை சரிபார்த்த பின்பு, அந்தப் பட்டியல் ஒரு சிறப்புக் குழுவிற்கு அனுப்பப்படும்.
- பிரதம மந்திரிதான் அந்தச் சிறப்புக் குழுவின் தலைவர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி மற்ற இரண்டு உறுப்பினர்கள் ஆவர்.
- சிபிஐ இயக்குநருக்கு இரண்டாண்டு பதவிக்காலம். அது ஒவ்வொரு ஆண்டாக, மொத்தம் மூன்றாண்டுக்காலத்திற்கு மேலும் நீட்டித்துக்கொள்ள, 2021இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
பொது ஒப்புதல்:
- மாநிலங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட இடங்களில் சிபிஐ விசாரிக்க பொது ஒப்புதல் வழங்கும். இதன்படி குற்றங்களை விசாரிக்க சிபிஐ ஒவ்வொரு முறையும் மாநிலங்களின் ஒப்புதலைக் கேட்கத் தேவை இல்லை.
- பொது ஒப்புதலை ஒரு மாநிலம் திரும்பப் பெற்றுக்கொண்டால், ஒவ்வொரு வழக்கிற்கும், மாநிலங்களின் ஒப்புதலை சிபிஐ பெறவேண்டும்.
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- இந்திய அரசியல் அமைப்பு சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஒரு டோக்கன் கொடுத்தது தப்பாப்பா? : அப்டேட் குமாரு