ஊழல் நிறுவனங்களிடமே மீண்டும் பொருள் சப்ளை கான்ட்ராக்டா? தலைவர்கள் கேள்வி!

Published On:

| By Prakash

“பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களிடமே, பொருட்களை சப்ளை செய்ய அனுமதி வழங்கி இருக்கும் தமிழக அரசுக்கு பாஜக மற்றும் அமமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2021) தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இத்துடன் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இந்தப் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அதிமுக, பாஜக கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்தியதுடன், சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

அதேபோல் தரமற்ற பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

companies supplied substandard pongal gift items were not banned

இந்த நிலையில் கடந்த ஆண்டு தரமில்லாத பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை.

அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.

companies supplied substandard pongal gift items were not banned

தரமற்ற பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.

இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள் என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம்.

தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு தண்டனை தராமல், சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப் படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம்தான் விடியல்போல” எனப் பதிவிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ? இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!

நவம்பர் 6 இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share