சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை அடுத்தடுத்து ஆறு இடங்களில் வழிப்பறி சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரை தாக்க முயன்ற ஜாபரை என்கவுன்டர் செய்தனர். Commissioner Arun clarifies snatch
இந்த வழிப்பறி சம்பவம் குறித்து இன்று (மார்ச் 26) சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் விளக்கினார் காவல் ஆணையர் அருண்.
அப்போது அவர், “நேற்று காலை சென்னையில் 6 மணிக்கு 6 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. என்னுடைய கவனத்திற்கு வந்தபோது, மாநகரம் முழுவதும் அலர்ட் செய்து விமான நிலையம், ரயில் நிலையங்களில் சோதனை நடத்த சொன்னேன். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டது. அவர்களை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தோம்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஓங்கோல் நோக்கி சென்றுகொண்டிந்த இன்னொரு நபரை ரயில்வே போலீஸ் உதவியுடன் கைது செய்தோம். இவர்கள் மூவரிடமிருந்து 26.5 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் இரானி கொள்ளையர்கள்.
இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட பைக்கை பறிமுதல் செய்தபோது, போலீசை நோக்கி இரண்டு ரவுண்டு துப்பாக்கியால் வழிப்பறி கொள்ளையன் ஜாபர் சுட்டான். துப்பாக்கி குண்டு போலீஸ் பொலிரோ வாகனத்தில் பட்டதால், போலீஸ் தற்காப்புக்காக தாக்க முயன்றதில் ஜாபர் என்கவுன்டர் செய்யப்பட்டார். இவர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இவர்களுக்கு லோக்கல் சப்போர்ட் எதுவும் இல்லை. ஒருவர் மட்டுமே முன்னதாக வந்து சில ஏற்பாடுகளை செய்கிறார்.
பறிமுதல் செய்யப்பட்ட பைக் கர்நாடகா மாநிலம் விதர் மாவட்டத்தை சேர்ந்தது. அது வாங்கப்பட்டதா அல்லது திருடப்பட்ட வண்டியா என்று சோதனை நடத்தி வருகிறோம்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரண்டு நபர்கள் நேற்று காலை 4 மணிக்கு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திருக்கிறார்கள். அவருக்காக இன்னொருவர் இங்கே காத்திருக்கிறார். அவர் வைத்திருந்த பைக்கை எடுத்துக்கொண்டு காலை 6 மணி முதல் ஒருமணி நேரம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு காலை 10 மணிக்கு விமான நிலையத்திற்கு சென்று ஹைதராபாத் செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது, கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து அவர்கள் தப்பி சென்றிருந்தால் அவர்களை கைது செய்வது சிரமமாக இருந்திருக்கும்” என்றார். Commissioner Arun clarifies snatch