டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
தற்போது மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னைக் கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறை அவகாசம் கோரியிருக்கிறது.
இதனிடையே டெல்லி முதல்வர் கைது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை, “கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்திகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அவருக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்டச் செயல்முறையை உறுதி செய்ய, இந்திய அரசை ஊக்குவித்து வருகிறோம்” என்று தெரிவித்தது.
இதற்கு இன்று (மார்ச் 27) கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “ இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்கு நாங்கள் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.
மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். ஜனநாயக நாடுகளில் இந்த பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
இல்லையெனில் அது ஆரோக்கியமற்ற முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். இந்தியாவின் சட்ட செயல்முறைகள் ஒரு சுயாதீனமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டவை. அதன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தேவையற்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று டெல்லியில் உள்ள அமெரிக்காவின் செயல் துணைத் தலைவர் குளோரியா பெர்பெனாவுக்கு இன்று காலை வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
அதன்பேரில், டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வந்த பெர்பெனா, இந்திய அதிகாரிகளிடம் சுமார் 40 நிமிடங்கள் பேசினார்.முன்னதாக கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெர்மனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?