முரளி சண்முகவேலன்
ஜனவரி மாதம் 10ஆம் தேதியன்று ஹைதியை மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. ஹைதியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்சில் உள்ள தேசிய அரண்மனை, ஐக்கிய நாட்டின் தலைமை அலுவலகம், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளக்காடாயின. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு, தண்ணீர், மின்சாரமின்றி தெருவிற்கு வந்தனர். ஒரு தேசமே ஒரே நாளில் நிர்மூலமாக்கப்பட்டது என்றால் மிகையல்ல. ஹைதி அரசின் அறிக்கையின்படி மூன்று லட்சம் பேர் இறந்ததாகச் சொல்லப்பட்டது. குடிநீர் சரிவரக் கிடைக்காததால் நிலநடுக்கத்திற்குப் பின்னர் மலேரியா மற்றொரு சுனாமியாக மக்களைத் தாக்கியது.

வழக்கம் போல மேற்குலகைச் சார்ந்த நிவாரண, புனரமைப்பு நாடுகள், நிறுவனங்கள் ஹைதியில் வந்திறங்க ஆரம்பித்தது. அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் பணம், பொருள், தொழில்நுட்ப உதவி, கட்டமைப்பில் உதவி எனப் பல்வேறு வகையான நிவாரணத் திட்டங்களை வழங்கியது.
இது ஒருபுறமிருக்க, தன்னார்வ நிறுவனங்களும் ஹைதிக்கு உதவி செய்யப் பெருமளவில் முன்வந்தன. பிரிட்டனில் மட்டும் 107 மில்லியன் பவுண்டுகள் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது. அமெரிக்காவில் தனவந்தர்களுடைய நிறுவனங்கள், உதாரணமாக ராக்கெஃபெல்லர், பில் கேட்ஸ், ஃபோர்டு, பின்னர் கூகுள் போன்றவை, சமூகச் சேவைகளுக்குப் பணம் கொடுப்பது சாதாரணமானதாகும். ஆனால், பிரிட்டனில் பேரிழப்பு, மருத்துவ இடர் போன்ற துயரங்களுக்கு மக்களிடமிருந்து பணம் திரட்டப்படுவது முக்கியச் சமூக நிகழ்வாகும். பிரிட்டனில் உள்ள பிபிசியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை காமிக் ரிலீஃப் (comic relief) என்ற சேவை நிறுவனம் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பணம் திரட்டிவருகிறது.
இம்மாதிரியான பிரிட்டிஷ் பொதுமக்கள் திரண்டெழுந்து மூன்றாம் உலக நாடுகளுக்காக மனமுவந்து கொடை அளிப்பது 1985ஆம் ஆண்டு எத்தியோப்பியப் பஞ்சம் குறித்து பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பித்தது. இம்மாதிரியான கொடைகள் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பஞ்சம், அரசியல் ஸ்திரத்தன்மை, லஞ்சம், பாலியல் வன்முறைகள், எய்ட்ஸ் மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் – ஆகியவற்றை முற்றாக ஒழித்திட வேண்டும் என்ற நோக்கத்திலேயே திரட்டப்படுகிறது.
எதற்காக பிரிட்டன் மக்களும் அரசாங்கமும் மூன்றாம் உலக நாடுகளின் நல்லெதிர்காலத்துக்கான நிதி திரட்டலையும் பொதுச் சேவைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்? இம்மாதிரியான தலையீடுகளுக்கு பிரிட்டன் தன்னை ஏன் ஒரு பொறுப்பாளியாகத் தொடர்ந்து முன்னிறுத்த வேண்டும்? இதற்குப் பலவிதமான விளக்கங்கள் இருந்தாலும், டோனி ப்ளேர் அளித்த தன்னிலை விளக்கம் இங்கு முக்கியமானது.
2001ஆம் ஆண்டு நடந்த லேபர் கட்சி மாநாட்டில் பேசிய பிரிட்டனின் அந்நாள் முதன்மை அமைச்சர் டோனி ப்ளேர், “ஆப்பிரிக்கா உலக மனசாட்சியில் உள்ள ஒரு கறை” என்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வேண்டிய உதவி அளித்து அந்நாடுகள் செழிக்கும் வரை அக்கறை இருக்கும் எனக் கூறினார். எனவே, தனது தலைமையிலான அரசு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனைத்து வகையான உதவிகளையும் உலக அமைப்புகளிலிருந்து பெறத் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார். ‘கடப்பாரைகளை விழுங்கியவனுக்கு வயிற்றுவலி வரத்தான் செய்யும்’ என்பது போல, காலனியக் குற்ற உணர்ச்சி இன்றைய முற்போக்கு பிரிட்டனை பாதித்திருப்பதில் வியப்பில்லை. இதனாலேயே ஆப்பிரிக்க மற்றும் கரீபிய நாடுகளில் நடக்கும் குளறுபடிக்கு ஒருவிதத்தில் பிரிட்டன் பொறுப்பேற்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்குக் காலனிய வரலாற்றில் பல சாட்சிகள் உள்ளன. ஒன்றை மட்டும் பார்க்கலாம்.
ரொடெஷியா.
சிசில் ரோட்ஸ் என்ற பிரிட்டிஷ் தங்க, வைரச் சுரங்க அதிபரின் நினைவாக அழைக்கப்பட்ட ‘ரொடேஷியா’வை (அதாவது ஒரு கம்பெனியின் தலைவரின் பெயரில் நாட்டின் பெயர் உருவாக்கப்பட்டது!) தனது காலனியப் பிடிகளிலிருந்து விடுபட பிரிட்டன் சம்மதித்தது. ஜிம்பாப்வேயாக பின்னாளில் அறியப்பட்ட இந்நாட்டின் மக்களுக்குத் தங்களது நிலங்களை வெள்ளையர்கள் 1885ஆம் ஆண்டு முதல் 1979 வரை அபகரித்துக்கொண்டது பற்றி மிகுந்த கோபம் இருந்தது. ‘ரொடேஷியா’வில் நடைபெற்ற கெரில்லாத் தாக்குதல்களுக்கு வெள்ளையர்களின் நில அபகரிப்பு ஒரு முக்கியக் காரணமாகும். எனவே விடுதலை அடையும் முன் இந்த நில அபகரிப்பு பேச்சுவார்த்தைக்கு வந்தது.
1970களில் ஆறாயிரம் வெள்ளை விவசாயிகள் 15.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள். இது ஜிம்பாப்வேயின் மொத்த நிலப்பரப்பில் 39 சதவிகிதம். ஆனால் உள்ளூரில் உள்ள 45 லட்சம் கறுப்பு விவசாயிகளோ 16.4 மில்லியன் ஹெக்டேர் பொது (சொந்தமானது அல்ல) வறண்ட நிலங்களில் விவசாயம் செய்து பிழைத்துவந்தனர்.
சுதந்திரப் பேச்சுவார்த்தைகளின்போது நிலச் சீரமைப்பு பற்றி விவாதிக்கும்போது, பிரிட்டன் லண்டனில் இருந்துகொண்டு [‘லங்காஸ்டர் அறிக்கை’](http://sas-space.sas.ac.uk/5847/5/1979_Lancaster_House_Agreement.pdf) என்ற ஓர் ஒப்பந்தத்தை வரைவு செய்தது. இம்மாதிரியான வரைவுகளில் எல்லாம் உள்ளூர்வாசிகளுக்கு இடம் கிடையாது. 1979ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த அறிக்கையின்படி நிலச்சீரமைப்பு எல்லாம் முன்னுரிமைப்படுத்தவில்லை. மாறாக, நிலத்தைக் கையகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு வியாபாரச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.
வெள்ளையர்கள் தங்கள் நிலத்தினை விற்க முன்வந்தால் எவரால் பணம் கொடுத்து வாங்க முடியுமோ அவர்களுக்கு விற்றுக்கொள்ளலாம் (willing buyer; willing seller basis) என்று ஒரு பிரிவு அமலுக்கு வந்தது. வெள்ளையர்களும் ‘மண்ணின் மைந்தர்களே’ என்பதால், அவர்கள் வைத்திருக்கும் நிலங்களைச் ‘சட்ட விரோதமாக’ எடுத்துக்கொள்ள முடியாது என்ற ஒரு வாதம் வைக்கப்பட்டது. அதே சமயத்தில், வெள்ளையர் நிலங்களை வாங்குவதற்கு பிரிட்டன், ஜிம்பாப்வே வெள்ளையர்களுக்கு நிதியுதவியும் அளித்தது.
லங்காஸ்டர் அறிக்கையில் இரண்டாவது முக்கிய அம்சம்: நாடாளுமன்ற இருக்கைகளில் இருபது சதவிகிதம் வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் மட்டுமே உள்ள வெள்ளையர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருபது சதவிகித ஒதுக்கீடு கொடுப்பதின் மூலம், ஜிம்பாப்வே நாட்டின் குடிமக்கள் – வெள்ளையர்களின் ஒப்புதலின்றி – எந்தச் சட்டத்தையும் சுதந்திரமாக இயற்ற முடியாத ஒரு சூழ்நிலையினை பிரிட்டன் உருவாக்கியது. இந்த அறிக்கை 1990வரை அமலில் இருக்குமாறு பிரிட்டன் பார்த்துக் கொண்டது.
ஜிம்பாப்வேயின் அரசியல் ஸ்திரத்தன்மையை இந்தப் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும். சுதந்திர ஜிம்பாப்வேயில் வெள்ளையரல்லாத உள்ளூர் விவசாயிகள் நஞ்சை நிலம் வேண்டி வெள்ளையர்கள் நிலத்தை ‘ஆக்கிரமிப்பு’ செய்தனர். அரசோ வெள்ளையர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழல். இது முகாபேயை உள்ளூர்வாசிகளுக்கு எதிராக நிலைநிறுத்தியது. இந்தக் காலகட்டத்தில் பிரிட்டன் போன்ற மேற்குலகு நாடுகள் முகாபேயை ஆதரித்ததை மறந்துவிட முடியாது. 1990க்குப் பிறகு முகாபே வேறு நிலைப்பாடு எடுத்தார். மேற்குலகம் மனித உரிமை மீறலைக் கையிலெடுத்தது; அரசியல், பொருளாதாரத் தடைகள் எல்லாம் அமலுக்கு வந்தன. இப்படிச் சொல்வதனால் முகாபே மக்கள் சீலர் என்ற பொருளல்ல. ஆனால், மேற்குலகின் அரசியல் தலையீடு ஆப்பிரிக்க நாடுகளின் சீரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
டோனி ப்ளேர், ‘ஆப்பிரிக்கா நமது மனசாட்சியில் இருக்கும் ஒரு கறை’ என்பதையும் இந்தப் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும். இது ஜிம்பாப்வேக்கு மட்டுமல்ல, பிரிட்டன் ஆட்சி செலுத்திவந்த அனைத்துக் காலனிய நாடுகளுக்கும் பொருந்தும் என்றால் மிகையல்ல. பிரிட்டன் ரயில் கொண்டுவந்தது, இயந்திரம் கொண்டுவந்தது என்றெல்லாம் சல்லியடிக்கும் நண்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது: ஆப்பிரிக்க நாடுகளை ஸ்திரத்தன்மையற்ற ஒரு பகுதியாக மாற்றியதில் காலனியத்துக்கு உள்ள பெரும்பங்கினை மறுக்கவே முடியாது.
உளவியல் ரீதியாகவும் காலனிய மக்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு நகைச்சுவையான உதாரணம்: நான் செனகலின் தலைநகரத்தில் உள்ள டாக்கர் தலைநகரத்தில் ஒரு மாநாட்டில் தலைமை ஏற்றுப் பேசிக்கொண்டிருக்கும்போது, இடைவேளை நேரம் நெருங்கியதால் – ‘தேநீர் இடைவெளி இப்போது’ என்று கூறியதற்கு உள்ளூர் செனகல் நண்பர்கள் மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டனர். ஒருவர் தனது மைக்கைப் பிடித்து ‘இது பிரிட்டன் அல்ல. இங்கு தேநீர் இடைவெளியெல்லாம் கிடையாது. நாங்கள் ஃபிரெஞ்ச் பேசுபவர்கள்; இங்கு காபி இடைவெளி மட்டும்தான் உண்டு.’ அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் ‘இப்போது காபி இடைவெளி’ என்று சொன்னதற்குப் பிறகே அவர் சமாதானம் அடைந்தார்.
இதைக் குறிப்பிடக் காரணம் அன்றாட வாழ்க்கையிலும், பழக்கவழக்கத்திலும் காலனிய நிறமும் அரசியலும் நம்மில் இரண்டறக் கலந்துவிட்டது. நமக்கு இவ்வாறான உளவியல் பாதிப்பு இருப்பது போலவே, வெள்ளையர்களுக்கான உளவியல் கூறிலும் காலனியப் பாதிப்பிருப்பதாகவே நான் நம்புகிறேன். அதன் ஒரு பகுதியாகவே தன்னார்வத் தொண்டுகளைப் பார்க்கிறேன். இப்படிச் சொல்வதால் தொண்டு நிறுவனங்களை நான் நிராகரிப்பதாக ஆகாது. ஆனால், அவற்றின் காலனிய அரசியலை மறுத்துவிட முடியாது என்பதையே இங்கு குறிப்பிடுகிறேன்.
இப்போது ஹைதிக்குத் திரும்புவோம்.
ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் துயரங்களை மட்டுப்படுத்தும் பணியிலும், நிவாரண வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் பிரிட்டனில் இருந்து சென்ற பல தொண்டு நிறுவனங்களில் ஆக்ஸ்ஃபாம் (Oxfam International) என்ற பிரபல நிறுவனமும் ஒன்று.
ஹைதியில் நடந்த ஆக்ஸ்ஃபாம் நிவாரணப் பணிகளுக்கு பெல்ஜிய நாட்டின் தலைமைப் பொறுப்பேற்றவர் ரொனால்ட் வான் ஹாவர்மெயிரன் (Roland van Hauwermeiren). பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை நடத்திய புலனாய்வின்படி ரொனால்டும், வேறு இரண்டு உயர்மட்ட அதிகாரிகளும் ஹைதியில் – அதாவது இயற்கைத் துயரினால் அல்லாடும் மக்களின் மத்தியில் – உள்ளூர் பெண்களுக்குக் காசு கொடுத்து செக்ஸ் பார்ட்டி நடத்திவந்ததை ஆதாரத்துடன் வெளியிட்டது.
பிரிட்டனின் அரசுக்கும் மக்களுக்கும் இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சிகரமான செய்தியாகும். லண்டன் உள்ளிட்ட முக்கிய நகர்களில் உள்ள தெருக்களில் உண்டியல் குலுக்கி, ஆக்ஸ்ஃபாம் நன்கொடை வசூல் செய்வது சாதாரண காட்சியாகும். ஆக்ஸ்ஃபாம் செக்ஸ் ஊழல் பிரிட்டனை உலுக்கியது. புலன் விசாரணையில் ஆக்ஸ்ஃபாம் உயரதிகாரிகளுக்கு இப்பிரச்சினை இருப்பது 2011இல் இருந்தே தெரியும் என்பது வெளிவந்தது. இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ரொனால்ட் சாட் நாட்டின் (மற்றொரு ஆப்பிரிக்க நாடு) தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் இதே மாதிரியான செக்ஸ் பார்ட்டியில் ஈடுபட்டவர் எனத் தெரியவந்தது. ஹைதியில் ‘கையும் களவுமாக’ப் பிடிபட்டபோது அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டு, தனது பதவியைத் துறந்து அமைதியாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என்பதும் தெரியவந்தது. அதாவது ஊழியர்களில் நடத்தையை ஆக்ஸ்ஃபாம் தெரிந்தே மறைத்தது என்பதும் வெளிவந்தது.
போன வாரம், ஆக்ஸ்ஃபாம் தங்கள் நாட்டில் நுழைய பணிபுரிய ஹைதி அரசாங்கம் தடை விதித்துள்ளது. பிரிட்டன் அரசோ ஆக்ஸ்ஃபாமுக்கு அளிக்கவிருந்த 16 மில்லியன் பவுண்டுகளை நிறுத்திவைத்துள்ளது. ஆக்ஸ்ஃபாம் ஏகப்பட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
ஆக்ஸ்ஃபாம் ஊழல் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாதிருக்கும்போது போன வாரம் மற்றோர் ஊழல் வெடித்தது.
உலகப் புகழ்பெற்ற தொண்டு நிறுவனமான ‘டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ இதே மாதிரியான செக்ஸ் ஊழலில் சிக்கியுள்ளது. இந்தப் புலனாய்வை பிபிசி வெளியிட்டுள்ளது. மருந்து வேண்டி அவதியுறும் ‘மூன்றாம் உலக நாடுகளில்’ உள்ள பெண்களிடம் செக்ஸ் பெற்றுக்கொண்டு மருத்துவ வசதி செய்து கொடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
பிரிட்டனிலோ அல்லது தாங்கள் வசிக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலோ உள்ள சக பெண்களிடம் வாலாட்ட முடியாதோர் ஆப்பிரிக்க கரிபீய நாடுகளில் உள்ள பாதிக்கப்பட்ட, துயரில் இருக்கும் பெண்களிடம் இவ்வாறெல்லாம் எப்படி நடந்துகொள்ள முடிகிறது என பிரிட்டனில் விவாதம் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழலில் உள்ள காலனியத்தனத்தையும், அது அளிக்கும் ஆண் அதிகாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனாலும் கல்வியாளர்கள், காலனிய வரலாற்றாளர்கள், ஊடகப் பண்டிதர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் இந்தக் கொடூரமான பாலியல் வன்முறையைக் கண்டித்தனர். கிட்டத்தட்ட அனைவரும். [மேரி பேர்ட்](https://www.classics.cam.ac.uk/directory/mary-beard) போன்றோர் ஒரு விதிவிலக்கு.
மேரி பேர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற செவ்வியல் வரலாற்றுப் பேராசிரியர். பிபிசியில் பிரிட்டன் மற்றும் உலக வரலாறு குறித்து ஆவணப்படங்கள் தயாரிப்பவர்; விவரணை செய்பவர். ஆக்ஸ்ஃபாமைச் சேர்ந்த ரொனால்டு போன்றோரின் நடத்தை குறித்து அவர் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய கருத்து காலனியம், ஆண் தன்மை, அதிகாரம் ஆகியவற்றை நேர் புள்ளியில் கொண்டுவந்து நிறுத்துகிறது.
அவர் சொன்னது: ரொனால்டு போன்றோர் செய்தது என்னவோ மன்னிக்க முடியாததுதான். ஆனாலும் போர், இயற்கை அழிவு போன்ற அழிவுச் சூழல்களில் மனிதன் நாகரிகமாக நடந்துகொள்வது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை என [ட்வீட்](https://twitter.com/wmarybeard/status/964613592833253376?lang=en) செய்தார். அதாவது ரொனால்டு போன்றோர் பணிச்சுமையின் காரணமாகவும், சூழல் காரணமாகவும் இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம் என்று வக்காலத்து வாங்கியிருந்தார். இது அனைவரையும் திடுக்கிடவைத்தது.
இப்படிச் சொன்னதற்கு அவர் விளக்கம் அளித்தாரே ஒழிய (‘நான் பாலியல் வன்முறையையோ, காலனியத்தனமான ஆண்தன்மையையோ நியாயப்படுத்தவில்லை’) மன்னிப்புக் கேட்கவில்லை. அந்த ட்வீட் இன்றும் இணையத்தில் உள்ளது. எனவே, மேரியைப் பொறுத்தவரையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வெள்ளையர்கள் இடர் நிறைந்த இடங்களில் ‘தொண்டு’ செய்யும்போது இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க இயலாது என்று நொந்துகொள்கிறாரே தவிர, வெள்ளை தொண்டு நிறுவனத்தினரின் தார்மிகப் பொறுப்புகளை கவனத்தில் கொள்ள மறுக்கிறார். அது மட்டுமல்ல; அவரது பார்வையில் வன்முறைக்குள்ளானோர் கவனம் பெறவில்லை. மேரி பேர்டின் காலனியம் தோய்ந்த இனவெறி கலந்த கருத்து: ‘இப்பெல்லாம் யாரு பிரதர் சாதி பாக்குறா?’ என்று சொல்லிவிட்டு பிராமண அல்லது பிற ஆதிக்கச் சாதி அறிவு ஜீவிகள் சுய சாதியிலேயே காதல் திருமணம் செய்வதை நினைவூட்டுகிறது.
ஆனால், மேரி பேர்ட் ஒரு பானைச் சோற்றில் ஒரு பருக்கையே. அடுத்த வாரம் கல்விக் கூடங்களில் வேரூன்றி இருக்கும் காலனியக் கூறுகளைப் பற்றிப் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன், (https://mobile.twitter.com/muralisvelan) ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
[கட்டுரை 1: பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]