அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமதுவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், ஹிருகேஷ்ராய் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமதுவை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்ய முன்மொழிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த இடமாற்ற முன்மொழிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி ஷமீம் அகமது கொலிஜியம் முன்பாக கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை உச்சநீதிமன்ற கொலிஜியம் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக கொலிஜியம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், “இடமாற்றம் தொடர்பான நீதிபதி ஷமீம் அகமது விடுத்த கோரிக்கையை நாங்கள் பரிசீலித்தோம். அவர் விடுத்த கோரிக்கையில் கொலிஜியம் எந்தவிதமான தகுதியையும் காணவில்லை.
எனவே, நீதிபதி ஷமீம் அகமதுவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான 21 ஆகஸ்ட் தேதியிட்ட பரிந்துரையை மீண்டும் கொலிஜியிம் தீர்மானித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
1993-ஆம் ஆண்டு முதல் ஷமீம் அகமது வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். சிவில், தொழிலாளர் நலன், கிரிமினல் என பல வழக்குகளை கையாண்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஷமீம் அகமது நிரந்தர நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன்… உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!