கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளி வளாகம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை காவல்துறையினரின் பாதுகாப்போடு மேற்கொள்ள கடந்த செப்டம்பர் 17-ம் தேதி பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

பள்ளி வளாகத்தில் சேதமடைந்திருந்த வகுப்பறை, ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் தொழிலாளர்களை கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மறுசீரமைப்பு பணிகள் முடிந்து விரைவில் பள்ளி திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
கலை.ரா