ADVERTISEMENT

கோவை கிணற்றில் வீசப்பட்ட ஜெயராமன் வழக்கு: இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை கிணற்றில் வீசப்பட்ட ஜெயராமன் கொலை வழக்கு விவகாரத்தை தொடர்ந்து சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் லெனின் அப்பாதுரையை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டார். மேலும் டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை மறு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே, ஜெயராமன் என்பவரை இரு மாதம் முன்பு அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாக பாலமுருகன், முருகபெருமாள் என்ற இரண்டு பேர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். முதற்கட்ட விசாரணையின் போது நெல்லையை சேர்ந்த ஜெயராமன் கோவைக்கு வேலை வந்ததாகவும், அப்போது பாலமுருகன், ஜெயராமன், முருக பெருமாள் ஆகிய மூன்று பேரும் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் முருகப்பெருமாள் ஜெயராமனை அடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறினர். இதனால் இருவரும் ஜெயராமனின் உடலில் கல்லைக் கட்டி அருகில் இருந்த தனியார் தோட்டத்து கிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து கடந்த 8ம் தேதி காவல்துறையினர் கிணற்றில் இருந்து எலும்புகூட்டை கைபற்றினர். பின்னர் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் கொலை செய்யவில்லை என்பதும், கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்பதும், உண்மையான கொலையாளிகள் நியூட்டன்,பெனிட்டோ என்பதும் தெரியவந்தது.

சென்னையில் ஜெயராமன் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு பெனிடோ, நியூட்டன் உட்பட சில நண்பர்கள் தனியார் நிறுவனம் மூலம் வாகன கடன் பெற்று உதவி புரிந்துள்ளனர். ஆனால், ஆட்டோ கடனை ஜெயராமன் சரிவர செலுத்தாமல் இருந்ததால் ஆத்திரத்தில் ஜெயராமனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து ஜெயராமனின் உடலை சென்னையில் இருந்து கோவை கொண்டு வந்து பாலமுருகன் உதவியுடன் செட்டிபாளையம் கிணற்றில் வீசி இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கொலை செய்த இருவர் அதற்கு உடந்தையாக இருந்த இருவர் என நான்கு பேரையும் செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் ஜெயராமன் வழக்கில் முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட சூலூர் காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை என்பவரை , கோவை சரக டிஐஜி சசிமோகன் இன்று பணியிடை நீக்கம் செய்தார்.

ADVERTISEMENT

மேலும் லெனின் அப்பாதுரை மேற்கொண்ட விசாரணைகள் முறையாக இருக்கின்றதா என்பது குறித்து மறு விசாரணையினை டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக ஆய்வாளர் லெனின் அப்பாதுரை நடந்து கொண்டுள்ளாரா என்ற கோணத்திலும் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share