டெல்லி குடியரசு தின விழாவில் கோவை பழங்குடியின தம்பதி: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!

Published On:

| By Selvam

நாட்டின் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில்  நடைபெற உள்ளது. இதில் வி.வி.ஐ.பிகள் பிரிவில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் வால்பாறை காடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த தம்பதி ராஜலட்சுமி – ஜெயபால்‌ டெல்லி செல்ல உள்ள நிலையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மலைவாழ் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிய பழங்குடி தம்பதி ராஜலட்சுமி – ஜெயபால்‌ ஆகியோர் வரும் குடியரசு தின விழாவில் கெளரவிக்கப்படவுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின தம்பதியினர் ராஜலட்சுமி – ஜெயபால்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகள் இன்றி கூடாரம் அமைத்து வசித்து வந்தனர்.

இந்த நிலையில், ராஜலட்சுமி – ஜெயபால் தம்பதியினர் பழங்குடியின மக்களுக்கு வசிப்பதற்கு வீடு வேண்டும் என மாவட்ட ஆட்சியர், தாசில்தார், சார் ஆட்சியர் ஆகியோரிடம்,

மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில், வனத்துறையினர் இவர்களை இந்த பகுதியை விட்டு காலி செய்யுமாறு கூறினர்.

ஆனால் காலி செய்யாமல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அகிம்சை போராட்டத்தை கையில் எடுத்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அறவழிப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தத் தகவல் தமிழக முதலமைச்சருக்கு தெரிய வந்தது. அதன்பின், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு இந்தப் பகுதி மக்களுக்கு தேவையான 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் காந்தியின் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி தம்பதியினர் வெற்றி பெற்றதால், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதியினரை 75-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க பரிந்துரை செய்தார்.

அதன்படி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் ஒப்புதலோடு இந்த தம்பதியினர் 75-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க டெல்லி செல்ல உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ராஜலட்சுமி கூறுகையில்,

“எங்கள் கிராமத்து மக்கள் வசிப்பதற்கு இடம் கேட்டு தர்ணா, உண்ணாவிரதம் எனப் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று, எங்களுக்கு தேவையான 12 ஏக்கர் நிலத்தை மீட்க மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் போராடினோம்.

இதில், வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சருக்கு மலைவாழ் மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: இந்த சீசனுக்கு எந்தெந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share