கேரளாவில் தீவிரமடையும் நிபா வைரஸ் பாதிப்பு- கோவை மக்களே உஷார்!

Published On:

| By Minnambalam Desk

Nipah Kerala Tamilnadu

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லை மாவட்டமான கோவையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Nipah Kerala

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 383 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் மலப்புரம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 4 பேர் பாலக்காடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்தில் மலப்புரம் மாவட்டத்தில் 18 வயது பெண் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். மேலும் பாலக்காடு மாவட்டம் தட்சணாட்டுக்கரை பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக கேரள எல்லையில் உள்ள கோவையிலும் நிபா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்றும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் நோய் தொற்று. குறிப்பாக பழ வகை வவ்வால்கள், பன்றி போன்றவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.வவ்வால்களின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி தொடர்பு கொள்வதன் வாயிலாகவோ, நோய் தொற்று பரவுகிறது.காய்ச்சல், தலைவலி, வாந்தி, துாக்கமின்மை, மூச்சு திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா என, மக்கள் கவனிக்க வேண்டும்.

கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்தால் அல்லது நோய் பாதித்த நபருடன் தொடர்பு கொண்ட பின், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன், அனைத்து பழங்களையும் நன்கு கழுவுவதுடன், சோப்பால் கைகளையும் கழுவ வேண்டும்.

ADVERTISEMENT

பொது சுகாதாரத் துறையால், எல்லை மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பீதி அடைய வேண்டாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share