தமிழகத்தில் சென்னையை அடுத்த பெரிய நகரமான கோவையில் தீபாவளி நேரத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக என்.ஐ-ஏ கோவை நகர போலீசாருக்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கார் வெடிகுண்டு வெடித்தது. ஜாமேஷா முபீன் என்பவர் இந்த காரை வெடிகுண்டுகளுடன் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வெடிகுண்டுகளில் இருந்த இரும்பு ஆணிகள் சல்லடையாக துளைத்ததில் முபீன் காருக்குள்ளேயே பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த வாரத்தில் அபூ ஹனிபா,சரண் மாரியப்பன் மற்றும் பவாஸ் ரகுமான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் , கைது எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 குற்றப்பத்திரிகைகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அல் உம்மா இயக்கத்தை தோற்றுவித்த எஸ்.ஏ. பாஷாவின் மருமகனான முகமது தால்கா என்பவரும் ஒருவர்.
இந்த அல் உம்மா இயக்கம்தான் 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த வெடிகுண்டு வெடிப்புகளுக்கு பின்னணியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி கோவை வந்த போது, நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது 58 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ கோவை போலீசாருக்கு எச்சரிக்கை அலெர்ட் விடுத்துள்ளனர். தொடர்ந்து, விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் , மால்கள், மக்கள் கூடும் வணிக வீதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையின் பக்கத்து மாவட்டங்களான ஈரோடு, சேலம், நீலகிரிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
60,000 நெருங்கிய தங்கம் விலை….இதற்கு ஒரு எண்டே இல்லையா?
போக்குவரத்துக் கழகத்தில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு!