ADVERTISEMENT

கோவை- மதுரை மெட்ரோ ரயில்.. மத்திய பாஜக அரசின் ‘நியாயமற்ற நிராகரிப்பு’- லிஸ்ட் போட்டு விளாசிய ஸ்டாலின்

Published On:

| By Mathi

Modi Stalin CBE Metro

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ இரயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்: அதிக அளவிலான தனிநபர் வாகனங்களைக் கொண்டும், நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. அனைத்து வகையிலும் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பெரும்நகரங்களில், அதிக திறன் கொண்ட பொது போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படுகின்றன.

ADVERTISEMENT

கோவை- மதுரை மெட்ரோ

இதற்காக, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ இரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தமிழக அரசு தயாரித்து, அதை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தோம். ஆனால் தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களை நிராகரித்திருப்பது, அந்த இரண்டு பெருநகரங்களில் வாழும் மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மோடியிடம் நேரில் வலியுறுத்தல்

கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் உயர் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அமைச்சகத்தை தொடர்ந்து வலியுறுத்தினோம். 24.5.2025 மற்றும் 26.7.2025 ஆகிய நாட்களில் தங்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முன்னுரிமை கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை சமர்ப்பித்து, இத்திட்டங்கள் குறித்து, தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியிருந்தேன்.

ADVERTISEMENT

கோவை- மதுரை மக்கள் அதிர்ச்சி

மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மெட்ரோ இரயில் திட்டம் குறித்த எங்களது கோரிக்கையை நிராகரித்தது எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாநகரங்களில் வசிக்கும் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

மக்கள் தொகை அளவுகோலா?

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை; மெட்ரோ இரயில் கொள்கை 2017-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, 20 இலட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோல் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின்படி அதன் மக்கள் தொகை 2011-ஆம் ஆண்டிலேயே 20 இலட்சத்தைத் தாண்டியிருந்தது; மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும்; இந்த 20 இலட்சம் என்ற அளவுகோல் ஒரேமாதிரியாகக் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசின் அளவுகோலை நீக்குக

இந்த அளவுகோலை கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளுக்குச் சுட்டிக்காட்டுவது என்பது, எங்களது இந்த நகரங்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் பாகுபாட்டு நிலையையே காட்டுகிறது. எனவே ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களில் மேலே குறிப்பிடப்பட்ட நகரங்களில் மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்திட மேற்கொண்ட முடிவினைப் போன்று, தமிழ்நாட்டிலுள்ள இந்த மாநகரங்களிலும் செயல்படுத்திட ஏதுவாக இந்த அளவுகோலை நீக்க வேண்டும்.

சென்னையில் இருந்து வேறுபடுகிறது

மேலும், கோயம்புத்தூர் நகரில் இந்தத் திட்டத்திற்கான பயணிகளின் அடர்வு எண்ணிக்கை, சென்னையில் உள்ள பயணிகளின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுத் தீர்மானிக்கப்பட்டுள்ளது; பயணிகளின் எண்ணிக்கை என்பது பல காரணிகளைச் சார்ந்திருப்பதால் இது பொருத்தமானதல்ல. இந்த இரண்டு நகரங்களும் சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளைக் கொண்டுள்ளன. விரிவான போக்குவரத்து ஆய்வுகளுக்குப் பிறகு RITES தயாரித்த கோயம்புத்தூருக்கான விரிவான இயக்கத் திட்டம், முன்மொழியப்பட்ட துறைகளில் மெட்ரோ இரயில் பயணத்தின் தேவையைத் தெளிவாகக் கணித்துள்ளது.

கவனத்தில் கொள்ளாதவை..

மதுரைக்கும், 2011-ஆம் ஆண்டின் விரிவான இயக்கத் திட்டத்தில், பொதுப் போக்குவரத்து அமைப்பு (BRT) முன்மொழியப்பட்டது; ஆனால் பெரும்பாலான பாதைகளின் நீளம் உயர்த்தப்பட வேண்டியிருப்பதால், இரயில் போக்குவரத்திற்கான அமைப்பையும் பரிசீலிக்கலாம் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விரிவான திட்ட அறிக்கை ஆய்வுகள் போக்குவரத்து கணிப்புகளின் அடுத்தடுத்த, தனிப்பட்ட மதிப்பீடுகளைச் செய்துள்ளன.இது மெட்ரோ இரயில் வழித்தடங்களின் தேவையை நியாயப்படுத்தியது. இந்தக் காரணிகள் போதுமான அளவு கருத்தில் கொள்ளப்படவில்லை.

மெட்ரோவுக்கான நிலம்

மெட்ரோ இரயில் வழித்தட உரிமையைப் பொறுத்தவரை, இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இத்திட்டங்களுக்குத் தனியார் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று; நிலம் கையகப்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை, மெட்ரோ இரயில் திட்டங்களின் நீண்டகால சமூக-பொருளாதார நன்மைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை முழுமையாக உணர்ந்துள்ளோம். தமிழ்நாட்டில் தற்போதைய திட்டத்தில் நில உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், இழப்பீட்டை வழங்கி வருகிறோம். கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் முன்மொழியப்பட்ட மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது என்பது ஒரு தடையாக இருக்காது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

டெல்லி வர ரெடி

இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களைச் சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகள் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான கருத்துருவைத் திருப்பியனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். தேவைப்படின் இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க தமிழக அரசின் குழுவுடன் புதுதில்லியில் தங்களை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

மேலும், இந்த இரண்டு திட்டங்களும் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் கலாச்சார மையத்தினை உள்ளடக்கியது என்பதைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share