கோவை: திமுக, அதிமுகவின் வியூகங்கள்… அண்ணாமலை நிலை என்ன?

Published On:

| By Aara

கோவை தொகுதியில் பாஜக சார்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதால் அத்தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போது, மதியத்திற்கு மேல், இலை ஓட்டுகள் தாமரைக்கு மாறியதாக அதிமுகவினருக்கு தகவல்கள் வந்ததால் அதிமுக தரப்பு பரபரப்பானது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி நேற்று அதிமுக நிர்வாகிகளை அவசரமாக அழைத்து விசாரணை நடத்தினார். இதனை கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள அதிமுக நிர்வாகிகள் சிலரை தொடர்புகொண்டு அப்டேட் என்ன என்பதைக் கேட்டோம்.

எல்லா பகுதிகளின் கள நிலவரங்களையும் விசாரித்தபிறகு அதிமுகவின் வாக்குகள் எதுவும் மாறவில்லை என்று தெரியவந்திருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.

14 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

மேலும் அவர்கள் சொன்ன சில முக்கியமான தகவல்கள் என்னவென்றால்,

கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் சூலூர், பல்லடம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவிற்குத் தான் அதிக ஓட்டுகள் விழுந்திருக்கின்றன். இந்த 3 தொகுதிகளில் பாஜவிற்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும் என்கிறார்கள்.

சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள் அதிகமாக நகர்ப்புறங்களைக் கொண்ட தொகுதிகள். இந்த பகுதிகளில் மற்ற 3 தொகுதிகளில் ஒப்பிடும்போது பாஜக கொஞ்சம் அதிக வாக்குகளை வாங்கியிருக்கலாம் என்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக பூத் நிர்வாகிகளை விசாரித்தபோது, பாஜகவிற்கு நிறைய பூத்களில் ஆட்களே இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். பல இடங்களில் வெளியூர் ஆட்களைத்தான் பூத் ஏஜெண்ட்களாக பாஜக போட்டிருந்துள்ளது. அந்த ஆட்களையெல்லாம் திமுகவினரும், அதிமுகவினரும் சேர்ந்து தான் வெளியே அனுப்பினோம் என்கிறார்கள் அதிமுக தரப்பினர்.

திமுக தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

5 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

“அண்ணாமலை கோவையில் போட்டியிடலாம் என்பதை அறிந்துதான் முன்பே… சிபிஎம் வசம் இருந்த கோவையை திமுக கேட்டுப் பெற்றது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவின் பலம், வரும் தேர்தலில் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு எல்லாவற்றையும் ஆய்வு செய்து வெற்றிக் களம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே திமுக இங்கே களமிறங்கியது.

திமுகவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்காக தலைமையின் கண்காணிப்பில் சிறப்புக் குழு கோவையில் முகாமிட்டிருந்தது. திமுகவின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கோர்ப்பதற்காக வீடு வீடாக சென்று இந்த டீம் தொடர்ந்து உழைத்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் கோவை தொகுதியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அறிந்து அதற்கேற்றபடி வியூகங்களை மாற்றி அமைத்து செயல்பட்டிருக்கிறார்கள் திமுகவினர். அண்ணாமலையின் சமூக தள ஆயுதத்தை வைத்தே அவருக்கு எதிராக பலமான பிரச்சாரம் செய்தது திமுக ஐடி விங்.

அண்ணாமலைக்காக வேலை பார்த்தது எல்லாமே வெளியூர் ஆட்கள்தான். மேலும் கோவையில் இருக்கும் பாஜக முக்கியஸ்தர்களே அண்ணாமலை எம்பி ஆவதை விரும்பவில்லை. எனவே கோவையில் ஏற்கனவே பாஜக பெற்ற வாக்குகளை பெற்றாலே ஆச்சரியம்தான். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஜூன் 4 ஆம் தேதி வரை காத்திருந்து பாருங்கள். ஜெயிப்பது நாங்கள்தான். அதுவரை எதிர்கட்சியினர் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டும்” என்று கூலாக சொல்கிறார்கள். திமுக தரப்பில்.

இதுகுறித்து பாஜக தரப்பு நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, , ”அண்ணாமலைக்காக தேர்தல் பணியாற்ற பல தொழில் நிறுவனங்களை, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கோவையில் குவிந்தது உண்மைதான்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் கூட்டம் இன் படமாக இருக்கக்கூடும்

தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்த நிலையிலேயே அண்ணாமலையின் ஆதரவு வலை தளங்கள் மூலம் அண்ணாமலைக்காக கோவையில் தேர்தல் பணியாற்ற வருகிறவர்கள் பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 28 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அண்ணாமலைக்காக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் பணி என்றால் நோட்டீஸ் கொடுப்பது கோஷம் போடுவது மட்டுமல்ல… அண்ணாமலைக்காக பல கோடீஸ்வர்கள் பணத்தையும் களத்தில் இறக்கினார்கள். அண்ணாமலைக்கு தெரியுமோ தெரியாதோ… பல ஊர்களில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு பாஜக சார்பில் லட்ச லட்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஓட்டுக்கு பணம் தரலாமா என்று சிலர் அண்ணாமலையிடம் கேட்டோம். ஆனால் அவர் கடுமையாக எச்சரித்து அனுப்பிவிட்டார்.

பழைய கால்குலேசன் எல்லாம் இனி கோவையில் வொர்க் ஆகாது, நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். மத்திய உளவுத்துறை 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று தகவல் அனுப்பியுள்ளது. 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு அண்ணாமலை தகவல் அனுப்பியுள்ளார். எனவே அவர் நம்பிக்கையோடு இருக்கிறார்” என்கிறார்கள்.

மேலும் கோவையின் கள நிலவரம் குறித்து அரசியல் நிபுணர்கள் சிலரிடமும் பேசினோம். அவர்கள் சொல்வது என்னவென்றால்,  “கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 63.8% வாக்குகள் பதிவானது. இந்த முறை 64.8% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. வாக்குப் பதிவில் பெரிய அளவுக்கான உயர்வு எதுவும் நடக்கவில்லை. 2019 இல் வாக்களித்த அதே வாக்காளர்களே இப்போது வாக்களித்துள்ளனர். புதிய அளவில் வாக்குப் பதிவுகள் பெரிதாக பதிவாகவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 45% வாக்குகளும், அதிமுக பாஜக கூட்டணி 31% வாக்குகளும் பெற்றிருந்தனர். அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளில் அந்தந்த கட்சிகளின் பலத்தை வைத்துப் பார்க்கும்போது 20% வாக்குகள் அதிமுகவின் வாக்குகள், 11% பாஜகவின் வாக்குகள் என்று சொல்லலாம். இப்போது திமுக ஆட்சியில் இருப்பதால் அவர்களின் மீதான அதிருப்தி மக்களிடையே நிச்சயம் இருக்கும். அதன் காரணமாக 7% வாக்குகள் திமுகவிற்கு குறைவதாக ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

அதனடிப்படையில் பார்த்தால், திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் இந்த முறை 38% சதவீதமாகக் குறையும். திமுக கூட்டணியில் குறையும் 7% வாக்குகளில் 3% பாஜகவிற்கு போவதாகவும், 4% அதிமுகவிற்குப் போவதாகவும் வைத்துக் கொள்வோம்.

அதிமுக இந்த முறை ஓட்டுக்கு 250 ரூபாய் கோவை தொகுதியில் கொடுத்திருக்கிறது. மேலும் பூத் செலவுகளுக்கும் நிறைய பணத்தை இறைத்திருக்கிறது. இதன் காரணமாக அதிமுக நிச்சயமாக தனது 20% வாக்குகளை தக்கவைக்கும் என்பது தெரிகிறது.

இந்நிலையில் பாஜக வெற்றிபெற வேண்டுமென்றால் 14% சதவீதத்திலிருந்து 38% சதவீதத்தை தாண்ட வேண்டும்.

கோவை தொகுதியில் மொத்தமாக 21 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 64.8% வாக்குகள் பதிவாகியிருப்பதால் 13,65,000 வாக்குகள் மொத்தமாக பதிவாகியுள்ளன. அண்ணாமலையின் வாக்குகள் திமுகவைத் தாண்ட வேண்டுமென்றால் கடந்த முறை பாஜக பெற்றதை விட 3,27,000 வாக்குகள் அதிகம் பெற வேண்டும்.

இவ்வளவு வாக்குகள் இந்த முறை பாஜகவிற்கு மாறி விழக் கூட வாய்ப்பிருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆனால் இவ்வளவு வாக்குகள் அண்ணாமலைக்கு போகும் அளவிற்கு பெரிதாக எந்த அலையும் கோவையில் வீசவில்லை என்பதை வாக்கு சதவீதம் மாறாததை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார்கள்.

எனவே கோவையைப் பொறுத்தவரை மூன்று கட்சிகளின் நிர்வாகிகளுமே பெரும் நம்பிக்கையில் இருக்கின்றனர். வாக்கு சதவீதங்கள் உள்ளிட்ட பல விடயங்களை கடந்த தேர்தல் முடிவுடன் ஒப்பிட்டு ஆராயும்போது, இந்த தேர்தல் முடிவிலும் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

ஜூன் 4 வரை காத்திருப்போம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவேகானந்தன்

“தோல்வி பயத்தால் நச்சு பேச்சு” : மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்!

வெற்றிமாறனுடன் இணையும் லாரன்ஸ்… தரமான சம்பவம் லோடிங்…!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share