மக்கள் வாழ தகுதியற்ற நகரம் என ஆங்கிலேயரால் வர்ணிக்கப்பட்ட நகரம் தான் கோவை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இன்று தமிழகத்தில் அதிக ஜிஎஸ்டி செலுத்தும் மாவட்டங்களில் ஒன்றாகவும், வேலை தேடி வரும் பிற மாவட்ட மக்களை அரவணைத்து கொள்ளும் மாவட்டமாகவும் கோவை மாறியது வெறும் 200 ஆண்டுகளில் தான். ஆம் இன்று கோவைக்கு 221 ஆவது பிறந்த நாள்.
கோவை வரலாறு
கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் என அழைப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே போல் நகரின் மையப்பகுதியில் உள்ள கோயிலில் குடி கொண்டிருக்கும் கோனியம்மனின் பெயரை கொண்டே ஊர் உருவானதாகவும் கூறப்படுகிறது.
சேரர், சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பிரிட்டிஷ் என பலரின் ஆளுகைக்கு கீழ் இருந்துள்ளது. கோட்டை மேடு பகுதியில் இருந்த கோட்டைக்காக திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களும் போர் புரிந்தனர் என்பதே வரலாறு. திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பின்னர் 1799 ல் கோவை ஆங்கிலேயர் வசமானது. இதைதொடர்ந்து ஆங்கிலேயரின் நிர்வாக வசதிக்காக 1804ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கோவை நகரை தலைநகரமாக கொண்ட கோவை மாவட்டத்தை உருவாக்கினர்.
அன்று தொடங்கி இன்று வரை இங்கு வாழும் மக்களின் கடும் உழைப்பால் மிளிர்கிறது கோவை. 1866ல் கோவை நகராட்சியாக தரம் உயர்ந்தது. பின்னர் 1981ல் 72 வார்டுகளுடன் மாநகராட்சியாக உயர்ந்தது.பின்னர் 2011ல் விரிவுபடுத்தப்பட்டுள்ள 100 வார்டுகளுடன் பெருநகரமாக உள்ளது.
1890ல் ஸ்டேன்ஸ் மில் உருவானது. இதுகோவை மாநகரின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இது கோவை ஸ்பின்னிங் அண்ட் வீவிங்க் பஞ்சாலை உற்பத்திக்கு அடித்தளமிட்டது. கோவைக்கு வந்த பைகாரா மின்சாரம் பஞ்சாலை தொழிலில் பலகட்ட வளர்ச்சிக்கு பெருந்துணையாக அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பம்ப், மோட்டார் தொழில், இயந்திர உதிரிபாகங்கள், உற்பத்தி, வெட்கிரைண்டர் என பல துறைகளில் கோவை தனி பெரும் வளர்ச்சியை எட்டியது.
பழமையான ரயில் நிலையம்
ஆங்கிலேயர்களின் நிர்வாக காரணங்களுக்காக கொங்கு மண்ணில் முதல் முறையாக 18.7.1861 ல் கட்டி முடிக்கப்பட்ட போத்தனூர் ரயில் நிலையம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது ரயில் நிலையத்தில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் போத்தனூர் ரயில் நிலையம் அருகே 1882ம் ஆண்டு தபால் நிலையம் தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்று அந்த தபால் நிலையம் இயங்கி வருகிறது.
இதேபோல் கோவையில் 1831ல் ஆடிஸ் என்பவரால் லண்டன் மிஷனரியே கோவையின் முதல் பள்ளிக்கூடத்தை தொடங்கியது. இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என ஏராளமான புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
சிறுவாணி தண்ணீர், இதமான தட்பவெட்ப நிலை என அனைத்தையும் தங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சாதமாக கோவை மக்கள் சாதகமாக பயன்படுத்தினர். கோவை மாநகரம் இன்று ஐடி துறையில் அதிரடியான வளர்ச்சியை கண்டு வருகிறது. ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் கோவையில் கால்பதித்துள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 14ம் தேதி முதல் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை ‘வீதி விழா’ கிராஸ்கட் ரோட்டில் நடைபெற்றது.
பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒயிலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பொய்கால் குதிரையாட்டம், தாரை தப்பட்டை, ஜமாப் உள்ளிட்ட 17 வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வளர்ச்சிப்பணிகள்
கோவையின் வளர்ச்சிக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழகத்தின் மிக நீண்ட ஜிடி நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. விமானநிலையம் விரிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மக்களின் நீண்ட கால கனவாக மெட்ரோ திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுத்து மெட்ரோ திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதே கோவை மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
