கோவை மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை கொடிசியா இணைந்து நடத்தும் கோவை புத்தகத் திருவிழா 2025 இன்று (ஜூலை 18) கோலாகலமாக துவங்கி உள்ளது. coimbatore bookfair started today
மாணவர்கள், பொதுமக்கள் இடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோவை கொடிசியா வளாகத்தில் இன்று மாலை 6 மணி அளவில் புத்தக கண்காட்சி தொடங்கியது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சுமார் 300 அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பதிப்பாளர்கள் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று உள்ளனர். இன்று தொடங்கிய புத்தக கண்காட்சி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலையில் கண்காட்சி துவங்கினாலும் இன்று காலை முதல் பார்வையாளர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அரங்கம் எண் 1 மற்றும் 2ல் கண்காட்சி நடைபெறும் நாட்களில் புதிய புத்தகங்கள் அறிமுகம், இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள் என பல ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டை விட புத்தக விற்பனை அதிகரிக்கும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.