கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் சென்னை போன்ற பெருநகரங்களில் 60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இந்த நிலையில் ஒரு இளநீர் விலை 100 ரூபாயை தாண்டும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேனி, சேலம் மாவட்டங்களில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை வெப்பம், நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக் கலைத்துறை நடவடிக்கை எடுக்காததால் இளநீர் விலை மேலும் உயரும் என்று தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார். Coconut Price
இதுகுறித்து ஈரோட்டில் பேசியுள்ள அவர், “தமிழகம், கேரளாவில் அதிக அளவில் தென்னை மரங்கள் உள்ளதால், தேங்காய், கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகம் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடுமையான வெப்பத்தின் தாக்கம் இருந்தது. போதிய மழை இல்லாததால் தென்னை மரங்களில் காய் பிடிக்கவில்லை.
இந்த ஆண்டில், தற்போது வரை வெயில் கடுமையாக தொடர்வதால் வரும் ஆண்டிலும் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளது. தேங்காய், கொப்பரைத் தேங்காய், இளநீர் விலை உயர இது ஒரு காரணமாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்த ரூகோஸ் வெள்ளை ஈ, தேசிய அளவில் அனைத்து இடங்களிலும் தென்னையை தாக்கி, பூவை அழித்து, காய் பிடிப்பை தடுக்கிறது. மட்டைகளின் மேல்புறம் கருப்பாகவும், கீழ்புறம் வெள்ளையாக்கியும் வளர்ச்சியை தடுக்கிறது. இதனை பூச்சிக் கொல்லி மருந்து தெளித்து தடுக்க இயலாது. அவ்வாறு செய்தால், நல்ல பூச்சிகள் இறந்து தென்னை மரங்கள் அழிந்துவிடும்.
விளக்குப்பொறி வைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் நிற அட்டையை வைத்தும், வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம். தற்போது அதற்கு இப்பூச்சிகள் கட்டுப்படவில்லை. நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக் கலைத் துறை, வேளாண் துறையினரும் அக்கறை காட்டவில்லை. இவற்றை எதிர்ப்பூச்சிகள், இவற்றை உண்ணும் பூச்சிகள் மூலமே கட்டுப்படுத்த முடியும். அதை அரசு செயல்படுத்தவில்லை.
இதனால் கடந்தாண்டு மார்ச் 19-ல் ஒரு கிலோ தேங்காய் 65 முதல் 80 ரூபாய்க்கு விற்றது. நேற்று மொடக்குறிச்சியில் ஒரு கிலோ, 160.79 முதல், 171.79 ரூபாய்க்கும், பெருந்துறையில், 140.38 முதல் 170.18 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையானது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு இளநீர் 100 ரூபாயை தாண்டும். எனவே, அரசு இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். Coconut Price
சென்னை மாநகருக்கு கடலூர், தேனி, பொள்ளாச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இளநீர் விலை உயர்வுக்கு போக்குவரத்து செலவு அதிகமானதும் காரணமாக இருக்கிறது என்று அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியுள்ளனர். Coconut Price