கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லாக் டெளன் இன்னும் நீட்டிக்கப்பட்டால் தனது காதலரை ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று பிரபல டிவி நடிகை சயந்தினி கோஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ‘மகாபாரதம்’ தொடரில் சத்யாவதியாக நடித்தவர் பிரபல நடிகை சயந்தினி கோஷ். தற்போது ‘நாகினி’ தொடரின் நான்காவது சீசனில் நடித்து வருகிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.
‘மாடல்’ அனுராக் திவாரி என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வரும் சயந்தினி கோஷ், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கொரோனா பிரச்சினை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில் ஆன்லைன் மூலம் திருமணம் செய்துகொள்ள யோசித்து வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறோம். இப்போதைய சூழ்நிலையைப் பார்த்தால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குத் திருமணம் நடைபெற வாய்ப்பு இல்லை எனத் தோன்றுகிறது.
சூழல் எவ்வாறு மாறுகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம். தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் வீடியோ காலில் முகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசித்து வருகிறோம். கொரோனா பிரச்சினைகள் முடிவடைந்த பின்னர் முறைப்படி திருமணத்தைப் பதிவு செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கிறோம். அவ்வாறு செய்யும்போது உங்கள் அனைவருக்கும் அது குறித்து தெரிவிக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
லாக் டெளன் காரணமாக நடைபெறும் திருமணங்கள் அனைத்துமே மிக எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. வீடியோ காலில் சிலர் திருமணம் செய்துகொள்வது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா நம்மை வீட்டுக்குள் முடக்கி வைத்தது மட்டுமல்லாமல் நமது வாழ்க்கையையும், பழக்க வழக்கங்களையும்கூட மாற்றி அமைத்திருப்பதாகப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”