ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு; ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

CM Vijay singappen special force launch

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று வெளியிட, அதனை இப்படையின் தலைமை அதிகாரி ஐ.ஜி. கே. பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார்.

தமிழக முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின்போது “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யைத் தொடங்குவதற்கான உத்தரவை உடனடியாகப் பிறப்பித்தார்.

ADVERTISEMENT

இதனைச் செயல்படுத்தும் விதமாக, ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. முதல்வரின் நேரடிப் பார்வையின் கீழ் இச்சிறப்புப் படை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு, இப்படையின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யின் தொடக்க விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழக முதல்வர் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்க்குச் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் இத்திட்டத்தின் இலச்சினையை வெளியிட்ட முதல்வர், ரோந்து வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து சிறப்பு படையின் ரோந்து வாகனத்தையும் இயக்கி மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் விஜய் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் மூலம் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ ரோந்து அறிமுகப்படுத்தப்படும். மேலும் ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

இவ்விழாவில் தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணி வாசன், தமிழ்நாடு டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாகப் பயிற்சி பெற்ற 500-க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்கள், அமைச்சர்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல்வர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரும் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்து கொண்டார். விழாவில் ஆளப்போறான் தமிழன் பாடல் காவல்துறை பேண்டு தரப்பில் இசைக்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share