பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று டெல்லி பயணம்!

By Pandeeswari Gurusamy

|

Published on 27 May 2026, 8:01 AM

Modi Vijay

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக இன்று (மே 27) டெல்லி செல்ல உள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மே 10ஆம் தேதி விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.

ADVERTISEMENT

முதல்வராகப் பதவியேற்ற பிறகு விஜய், பிரதமர் மோடியை முதன்முறையாக இன்று மாலை 4:30 மணியளவில் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் டெல்லி புறப்படுகிறார். பிற்பகல் 1:00 மணியளவில் டெல்லி செல்லும் அவருக்கு, அங்குள்ள திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்பு படையணி சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, மாலை 4:30 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, மேகதாது அணை விவகாரம், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம், பிஎம் ஸ்ரீ திட்டம், தமிழகத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்புதல்கள் ஆகியவை குறித்த விரிவான மனுவை முதல்வர் சமர்ப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் விஜய் சந்திக்கக்கூடும் எனத் தெரிகிறது. மேலும், இப்பயணத்தின் போது குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அரசுமுறை சந்திப்புகள் தவிர, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த முறை கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த விஜய், இன்று தமிழக முதல்வராக முதன்முறையாக டெல்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel