மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால் இன்னும் திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்தநிலையில் இன்று (மார்ச் 3) காலை சிந்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்துக்கு சென்ற ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 29+2 என தொகுதி பங்கீடு பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நமது மின்னம்பலத்தில், சோனியாவின் “Operation PC” சக்சஸ்? காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ப.சிதம்பரத்திடம் ஸ்டாலின் சொன்ன ”நம்பர்ஸ்” என்ன? என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் விரிவாக சொல்லியிருந்தோம்.
இன்று மாலை மகளின் நிச்சயதார்த்த விழாவை வைத்துக்கொண்டு பிற்பகல் வரை கூட்டணி பேச்சுவார்த்தைக்காக செல்வப்பெருந்தகை அலைந்துகொண்டிருந்தார்.
இந்தசூழலில் தற்போது செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியாக கலந்துகொண்டுள்ளார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் எண்ட்ரி கொடுக்க, மேடையில் அவரது கையை பிடித்து அழைத்துச் சென்ற முதல்வர் தன்னருகே நிற்கவைத்தார்.
உடன், திமுக எம்.பி.கனிமொழி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதுபோன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஒரு வட்ட மேஜையில் ஸ்டாலின், ப.சிதம்பரம்,கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட பலர் அமர்ந்து கலகலப்பாக பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
