மதுரையில் இன்று (ஜூன் 1) திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று (மே 31) மதுரை சென்ற முதல்வர் ஸ்டாலின் 17 கி.மீ ரோடு ஷோ மேற்கொண்டார்.
ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற வழியில் அமைந்துள்ள பந்தல்குடி வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்ததால், திரைச்சீலை கொண்டு மறைக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தனர்.
இந்தநிலையில், ரோடு ஷோ மேற்கொண்ட பிறகு, சுற்றுலா மாளிகைக்கு செல்லும் வழியில் பந்தல்குடி வாய்க்காலை பார்வையிட்டு ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பந்தல்குடி வாய்க்காலை ஆய்வு செய்து தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுசுவர்களை கட்டும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவுக்கு அறிவுறுத்தினார். Cloth Covered Pandalkudi Canal
மாநகராட்சியின் சார்பில் தூர் வாரும் பணிகளுக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், நீர்வளத் துறையின் சார்பில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு 63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகளை மேற்கொள்வதற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். Cloth Covered Pandalkudi Canal
முதலமைச்சர் ஸ்டாலின், விரைந்து அதற்கான அரசாணையை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
