புதுச்சேரி மாநிலத்தில் மதுவிலக்கா என்ற கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். Liquor Prohibition in Puducherry
தென்னிந்தியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் உள்ளது. ஆன்மிக சுற்றுலா, உல்லாச சுற்றுலா என்ற இரண்டு வகைகளிலும் புதுச்சேரிக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது.
சுற்றுலா வளர்ச்சியின் தாக்கத்தை தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது மது. தமிழ்நாட்டை
ஒப்பிடும்போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை நகரமாக அது இருப்பதும் தான், மதுப்பிரியர்களை பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி ஈர்க்க முக்கிய காரணம்.
ஒரு காலத்தில் புதுச்சேரி மாநில வருவாய்க்கும், புதுச்சேரி வாழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் பஞ்சாலைகள், கைத்தறி நெசவு, சர்க்கரை ஆலைகள், விவசாயம் ஆகியவை முக்கிய பங்காற்றின.
ஆனால் தற்போது வணிகம், சுற்றுலா மற்றும் மது விற்பனை மூலம் கிடைக்கும் கலால் வரி ஆகியவை புதுச்சேரி அரசின் வருவாயின் மையமாக உள்ளன.
மதுபான விற்பனை மூலமாக அரசுக்குக் கிடைத்த வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1000 கோடி வரை என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு அது கிட்டத்தட்ட ரூபாய் 2,000 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினார்கள்.
இறுதியாக முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், “வெளியில் தவறுதலாக விமர்சனம்
செய்கிறார்கள். மதுவிலக்கு என்ற முடிவை எடுக்க முடியுமா? என்றால், அது முடியாது. பூரண மதுவிலக்கு என்றால், நான்தான் முதலில் ஆதரவு தெரிவிப்பேன். ஆனால் அது முடியாது. மதுபான தொழிற்சாலைகள் வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. புதுச்சேரிக்கு வருமானம் கிடைக்கிறது.
தற்போது ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தண்ணீரை அதிகம் பயன்படுத்தாத சுற்றுச்சுழல் வகையில் பாட்டிலிங் மதுபான தொழிற்சாலைகளுக்கு தடை இல்லா சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. Liquor Prohibition in Puducherry
இதனால் 5,000 பெண்களுக்கு வேலை கிடைக்கும். அரசு பல சங்கடங்களும் தடைகள் இருந்தாலும் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தும். அரசின் கோப்புகளை விரைந்து அனுப்ப வேண்டும். எதிர்மறையான சிந்தனையோடு அதிகாரிகள் செயல்பட கூடாது” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். Liquor Prohibition in Puducherry