உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வெற்றி தோல்வி பற்றிய விவாதங்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கூலாக அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இந்தியக் குடியுரிமைப் பணி மற்றும் மத்திய பணி அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகின்றன. இந்த போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 4) காலை தொடங்கி வைத்தார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ரயில்வே, ஜிஎஸ்டி, வருமான வரித்துறை, வனத்துறை ஆகிய 6 கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிகள் சென்னை மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.
முதலில் 6 அணி தலைவர்களுடன் உரையாடிய முதல்வர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கிரிக்கெட் அணியினருடன் குழுவாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் போட்டித் தொடரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். அமைச்சர் ஜெயகுமாரும், டிஜிபி திரிபாதியும் முதல்வருக்குப் பந்து வீசினார்கள். தனக்கு வீசப்பட்ட பந்துகளை முதல்வர் அடித்து விளையாடியது அங்கிருந்த அதிகாரிகளை வெகுவாக கவர்ந்தது.

இதனையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அணிகள் மோதிய முதல் போட்டிக்கு முதல்வர் டாஸ் போட்டார். இதில் வென்ற ஐஏஎஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடத் தொடங்கியது. முன்னதாக நிகழ்ச்சியில் உரையாடிய முதல்வர் பழனிசாமி, விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது . விளையாட்டின் மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன அழுத்தத்தைப் போக்க முடியும் என தெரிவித்தார்.

முதல்வர் கிரிக்கெட் விளையாடியது குறித்து ட்விட்டரில் மிஸ்டர் ஆக்டிவ் எடப்பாடி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
