ஸ்பெயினில் அந்நாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இந்தியாவின் தேசிய மொழி எது என்ற கேள்விக்கு Unity In Diversity என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி பதிலளித்ததற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். CM MK Stalin Praises Kanimozhi
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor ராணுவ நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் தருவதற்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு நாடுகளுக்கு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த குழுக்களில் ஒன்றுக்கு திமுக எம்பி கனிமொழி தலைமை தாங்கினார். இந்த குழு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அந்நாட்டுத் தலைவர்களுக்கு மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தது.
இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டுக்கு கனிமொழி எம்பி தலைமையிலான குழு பயணம் மேற்கொண்டது. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில், இந்திய குழுவினரை ஸ்பெயின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் தேசிய மொழி எது ஸ்பெயின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப இதற்கு, Unity In Diversity- வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி என கனிமொழி எம்பி பதில் தந்தார்.
கனிமொழியின் இந்த பதில் தரும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வாழ்த்துகளும் குவிந்தன.
வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்த கனிமொழி எம்பி நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி #UnityInDiversity” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் – உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை @KanimozhiDMK MP அவர்களை வாழ்த்தினேன்!
இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை – ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.