இந்து சமய அறநிலையத்துறை சார்பில், காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 16) காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் பயிலும் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள் மற்றும் நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் இன்று துவங்கப்பட்டது.
இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு, இட்லி, வெண் பொங்கல், ரவா கிச்சடி, ரவா உப்புமா உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆண்டிற்கு 3.79 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
போலாந்தில் விழுந்த ஏவுகணை: ஜி20 மாநாட்டின் இடையே அவசர கூட்டம்!