தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல்வருக்கு நன்றி: பாரதிராஜா

Published On:

| By Jegadeesh

தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்துவரும் சூழலில் தமிழ் திரைப்படங்களின் வியாபார எல்லை, வணிக மதிப்பு உயர்ந்து வருகிறது.

நடிகர்களின் சம்பளங்கள் ஒரு படத்திற்கான சம்பளம் 100 கோடி என்கிற அளவை எட்டியுள்ளது. இருந்தபோதிலும் திரைப்பட தயாரிப்புக்கான உள் கட்டமைப்புக்களான படப்பிடிப்புதளங்கள் தமிழ்நாட்டில் போதுமானதாக இல்லை.

ADVERTISEMENT

வருடத்திற்கு சுமார் 3000ம் கோடி அளவில் தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் முதலீடு செய்யப்படுகிறது. இவற்றில் 50% வீத முதலீட்டை கொண்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

இதனால் தமிழ் சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு போதுமானதாக இல்லை. சிறுபட தயாரிப்பு, தொலைக்காட்சி தொடர்கள் மூலமே குறைந்தபட்ச வேலைவாய்ப்பு சினிமா தொழிலாளர்களுக்கு கிடைத்து வருகிறது.

ADVERTISEMENT

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் படப்பிடிப்புதளங்கள், ஸ்டுடியோக்களை நவீன கட்டமைப்புடன் உருவாக்க அங்குள்ள நடிகர்கள், தயாரிப்பாளர்கள் முதலீடு செய்து தங்கள் மொழி படங்களின் படப்பிடிப்பை அங்கேயே நடத்த முயற்சி எடுத்து வெற்றியும் அடைந்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டில் திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அப்படிப்பட்ட முயற்சிகளை செய்வதில்லை, இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதி நவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பை வரவேற்று, நன்றி தெரிவித்துள்ளார் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா. இது தொடர்பாக அவர் இன்று(ஏப்ரல் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில்சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஒரு செய்தியை நேற்று சட்டசபையில் வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் M.P. சாமிநாதன் அவர்களுக்கும் முதலில் எங்களின் மனமார்ந்த நன்றி.

தமிழக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை 2020-21-ம் ஆண்டுகளுக்கு பிறகு, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.
2022-ல் 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி மேலும் தொடர்ந்து தமிழ் சினிமா துறை ரூபாய் 5,000 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் துறையாக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய வளர்ச்சியை எட்ட முட்டுக்கட்டையாக இருப்பது, தமிழ் நாட்டில் ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட பல படங்கள் (சமீபத்தில் அண்ணாத்தே, பொன்னியின் செல்வன், வலிமை, துணிவு, வாரிசு…) தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ஸ்டுடியோக்களில் தயாராகியவை. 2023-24-லும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவுக்கு ஸ்டூடியோ வசதிகளில் முன்னோடியாக இருந்த தமிழ் நாடு, இன்று அண்டை மாநிலங்களை அத்தகைய வசதிகளுக்கு எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படுகிறது.

அண்டை மாநிலங்களில் பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்கள் படப்பிடிப்பு அதிக நாட்கள் நடத்தப்படும் பொது, அதற்காக ஆகும் அத்தனை செலவுகளும் அந்த மாநிலத்தின் வருமானத்தில் கூடுகிறது. அங்கே இருக்கும் வேலையாட்களுக்கே வேலை கிடைக்கும் சூழ்நிலையும் உள்ளது.

இந்த நிலைமை மாற, சென்னை மாநகரத்தில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதிய ஸ்டுடியோக்கள் நிறுவப்பட வேண்டும். சென்னை மாநகரத்தில் தற்போது உள்ள நான்கு,ஐந்து தனியார் ஸ்டுடியோக்கள் வளர்ந்து வரும் தமிழக ஊடக/பொழுதுபோக்கு துறைக்கு போதாது.

எனவே, விரைவில் புதிய ஸ்டுடியோக்கள் சென்னை மாநகரத்தில் வருவது மிக முக்கியம். சென்னை மாநகரத்தை சுற்றி 50 கிலோமீட்டர் தூரத்திற்குள், ஒரு புதிய நவீன திரைப்பட நகரம் நிறுவப்பட, தமிழக அரசு உதவ வேண்டும்.

இதை தமிழக அரசு – தனியார் கூட்டு முயற்சியில் எளிதாக நிறுவ முடியும் என்று தமிழக அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, உடனே அதை நிறைவேற்ற இந்த புதிய நவீன திரைப்பட நகரம் உருவாக்கும் திட்டம் பற்றி அறிவித்துள்ள தமிழக முதலமைச்சருக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கும் எங்கள் நன்றிகள்.

இந்த திட்டம் விரைவில் செயல் வடிவம் பெற்று, இந்தியாவே பார்த்து வியக்கும் ஒரு நவீன திரைப்பட நகரம் சென்னையில் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இராமானுஜம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஐபிஎல் பாஸ் வேண்டும்: வேலுமணிக்கு , உதயநிதி சுவாரஸ்ய பதில்!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share