மணிப்பூரில் ஏறத்தாழ இரண்டு மாதங்களாக வன்முறை நடந்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை இன்று (ஜுன் 30) ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. தற்போது மணிப்பூர் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
வன்முறையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தசூழலில் மணிப்பூர் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“மணிப்பூரில் நடந்த வன்முறையால் சொந்தங்களையும், வீடுகளையும் இழந்தவர்களின் நிலையைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.
நான் பார்த்த ஒவ்வொரு சகோதர, சகோதரி, குழந்தைகளின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது.

மணிப்பூருக்கு தற்போது தேவையான மிக முக்கியமான விஷயம் அமைதி மட்டுமே.
நமது மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். நமது முயற்சிகள் அனைத்தும் அந்த இலக்கை நோக்கி ஒன்றுபட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதுபோன்று இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து அம்மாநிலத்தின் நிலவரம் பற்றி பேசினார்.
இந்தசூழலில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்,ஏ.க்கள் இந்த நேரத்தில் பதவி விலக வேண்டாம் என்று முதல்வரிடம் வலியுறுத்தியிருக்கின்றனர். எனினும் ஆளுநரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் பைரன் சிங்கின் ராஜினாமா உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தசூழலில் மணிப்பூர் முதல்வரின் செயலகம் மற்றும் ராஜ் பவனில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள நுபி லால் வளாகத்தில் பல பெண்கள் கூடி, பைரன் சிங் பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தி வருவதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகிறது.
தற்போது மணிப்பூர் முதல்வர் என் பைரன் சிங் இம்பாலில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
பிரியா
“அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் பின்பற்றவில்லை” – வில்சன் குற்றச்சாட்டு!
புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால்
