ஆசிரியர் பணி நியமனம்: தமிழக அரசு பதில்!

Published On:

| By Balaji

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி ஆகும் என்று தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.

முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆன்லைன் மூலம் மனுவொன்று அளித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்த மனுவில், “2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றொரு நியமனத் தேர்வு நடத்தி பணி வழங்க அரசாணை அன்றைய அதிமுக அரசால் வெளியிடப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. அந்த அரசாணையை அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய நமது முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கூறினார்கள். ஆகவே முதலமைச்சர் கூறியதுபோல் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படுமா அல்லது நியமனத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுமா என்பதைத் தெரிவிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நியமனத் தேர்வு மூலம் பணி வழங்கும் பட்சத்தில் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் விரைந்து வெளியிட்டால் பத்து வருடங்களாக இதனை நம்பியே வாழ்க்கையைத் தொலைத்த எங்களுக்கு, தேர்வுக்கு முயற்சிக்கும்போது அதிகபட்ச நேரம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் பள்ளிக்கல்வித் துறை அளித்துள்ள பதிலில் “வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி ஆகும்.

பள்ளிக்கல்வித் துறையின் 2018 ஜூலை 20ஆம் தேதி அரசாணை எண் 149இன்படி போட்டித் தேர்வு மூலம் தேர்வு பணி மேற்கொள்ளப்படும். இந்தத் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்போது பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share