தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் செயற்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என அதிமுக, பாஜக விடுத்து வந்த அழைப்பை நடிகர் விஜய் நிராகரித்துள்ளார். TVK Vijay CM Candidate
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவரான நடிகர் விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதாக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்ட் மாதம் நடத்துவது; செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்வது, கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக- பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிப்பு
தவெகவின் செயற்குழுவில் நடிகர் விஜய்தான் முதல்வர் வேட்பா:ளர் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தது.
ஆனாலும் அதிமுக, பாஜக இரு கட்சிகளுமே சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க விஜய்யின் தவெக தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தன.
இன்னொரு பக்கம், பாஜகவுடனான கூட்டணியை தேர்தலுக்கு முன்னதாக முறித்துக் கொண்டு விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்கும்; விஜய்க்கு துணை முதல்வர் பதவியை தருவதாக அதிமுக வாக்குறுதி தரலாம் என்ற யூகங்களும் ரெக்கை கட்டிப் பறந்தன.
அதேபோல பாஜக தலைவர்களும் இடைவிடாமல், திமுகவை வீழ்த்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து வந்தனர்.
இந்த பின்னணியில், தவெகவின் செயற்குழுக் கூட்டத்தில், நடிகர் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என சிறப்புத் தீர்மானத்தை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது தவெக. இதன் மூலம் அதிமுக- பாஜக தலைவர்கள் இடைவிடாமல் விடுத்த கூட்டணிக்கான அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார் நடிகர் விஜய்.
இதனையடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.
