முன்னாள் மாணவர்களிடம் நிதி கேட்கும் முதல்வர்: நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்!

Published On:

| By Kalai

அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த பொதுச்சமூகத்தின் ஆதரவை திரட்டும் நோக்கில் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  

சென்னை, கிண்டி, ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(டிசம்பர் 19) தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்ஜிஓ),

தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) மூலம் அரசுப்பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல்,

இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக இருக்கும்.  

இதற்கான இணையதளத்தையும் முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம்.

மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் அரசு பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கட்டமைப்புகள் வலுப்படுத்த இயலும் என்று அரசு கூறியுள்ளது.

இதை தொடர்ந்து நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற அமைப்பையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள  டி.வி.எஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலை.ரா

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்.எல்.ஏ!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பேரணி: தடுத்து நிறுத்திய போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share