கிருஷ்கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு இன்று (செப்டம்பர் 14) அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின் அம்மாவட்டத்திற்கான 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் உள்ள திடலில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்துக்கு வந்தார். அங்கிருந்து சாலை வழியாக கிருஷ்ணகிரிக்கு சென்ற முதல்வர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலத்திலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை சந்தித்தார். மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
பின்னர் சென்னை சாலையில் அமைந்துள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற பிரமாண்ட அரசு விழாவிற்கு சென்றவர் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ரூ.2885 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 85,711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர், “வரலாற்று பெருமையை கொண்டது கிருஷ்ணகிரி மாவட்டம். மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான். கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கான அடித்தளங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் போடப்பட்டது. திராவிட மாடல் ஆட்சிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் நீண்ட நெடிய உறவு உண்டு என்றார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- தளி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பல்வேறு கிராம பொதுமக்களும், பழங்குடியினரும் ஒன்றிய தலைமை இடத்திற்கு சென்று வர அதிக தூரம் பயணிக்க வேண்டி இருப்பதால் அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
- கெலமங்கல ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு மலைக் கிராமங்களுக்கு ரூ.12,43,00,000 மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்.
- கெலமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கெலமங்கலம் புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்படும்.
- ஓசூர் மாநகரில் NH 44 மற்றும் NH 844 ஆகியவற்றை இணைக்க கூடிய வகையில் புதிய சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்படும்.
- ஓசூர் மாநகரில் எல்சிஇ 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றார்.
