சென்னையில் மேகவெடிப்பைப் போல நேற்று (ஆகஸ்ட் 30) இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையை அடுத்த மணலியில் மட்டும் 27 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சென்னை மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் நேற்று (ஆகஸ்ட் 30) இரவு 11 மணியளவில் மேக வெடிப்பைப் போல கனமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. இந்த மழை சென்னை மாநகரின் பல பகுதிகளில் விடிய விடிய பெய்தது.
சென்னையை அடுத்த மணலியில் ஒரு மணிநேரம் பெரும் மழை பெய்தது. மணலியில் மட்டும் ஒரு மணிநேரத்தில் மட்டும் 27 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில் 1 மணிநேரத்துக்குள் 10 செ.மீ.-க்கும் அதிகமான மழை கொட்டியது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தமது எக்ஸ் பக்கத்தில், சென்னையில் இந்த ஆண்டின் முதலாவது மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே பல இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை விவரம்:
- மணலி 27 செ.மீ
- மணலி விம்கோ நகர் 23 செ.மீ
- கொரட்டூர் 18 செ.மீ
- கத்திவாக்கம் 14 செ.மீ
- திருவொற்றியூர் 13 செ.மீ
- கொடுங்கையூர் 13 செ.மீ
- பல்லாவரம் 12 செ.மீ
- தியாகராய நகர் 12 செ.மீ.
