டீரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படம் ஜப்பான். அவரது ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.
பருத்திவீரன் தொடங்கி கார்த்தி நாயகனாக நடிக்கும் 25வது படம் ஜப்பான் என்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களும் வியாபார முக்கியத்துவம் உள்ள நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து அதகளம் செய்த சுனில் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகிய திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜிவி பிரகாஷ்குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணியாற்றுகிறார்.
2022 நவம்பரில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்காட்சி குறித்து கடும் விவாதம் நடந்துகொண்டிருப்பதாக இயக்குநர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதாவது படத்தின் இறுதியில் கார்த்தி இறந்துவிடுவது போல் காட்சி அமைத்திருக்கிறார் இயக்குநர். அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.
கார்த்தியின் தற்போதைய கதாநாயக பிம்பத்திற்கு அவர் இறப்பது போன்ற காட்சி சரியாக இருக்காது என்று கார்த்தி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவாதம் முடிவடையாமல் தொடருவதால் படவேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இராமானுஜம்