வழக்கறிஞரை வெட்டிய குமாஸ்தா : பின்னணி என்ன?

Published On:

| By christopher

Clerk who hacked lawyer infront of court : What's the background?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா ஆபிஸ் சாலையில் நீதிமன்ற வளாகம், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது.

ஓசூரில் மிக முக்கியமான சாலையான இப்பகுதியில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ஒருவரை அந்த சாலையில் வைத்து ஒருவர் இன்று (நவம்பர் 20) பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து ஓசூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரிடம் விசாரித்தோம்.

ஓசூரில் மிக பிரபலமான சீனியர் வழக்கறிஞர் சத்திய நாராயணன், அவருக்கு ஜூனியராக இருப்பவர் வழக்கறிஞர் கண்ணன். இவர் போயர் (கல் உடைப்பவர்) சமூகத்தை சேர்ந்தவர். திருமணமாகாத இவர் ரங்கசாமி பிள்ளை தெருவில் தனியாக வசித்து வருகிறார்.

அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாமல்பேட்டையில் குமாஸ்தா ஆனந்தன் வசித்து வருகிறார். இவரும், இவரது மனைவியும், வழக்கறிஞருமான சத்யவதியும் பளிச்சநாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

ஒரே நீதிமன்றத்தில் பணிபுரியும் கண்ணன், ஆனந்தன் மற்றும் அவரது மனைவி சத்யவதி மூவரும் அன்றாடம் சந்திக்க கூடியவர்கள்.

வழக்கறிஞர் கண்ணன்

ஆனந்தனுக்கும், சத்யவதிக்கும் திருமணமாகி ஒருவருடமாகிறது.  இந்த நிலையில், கண்ணன் சத்யவதிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனையறிந்த ஆனந்தன்,  தனது மனைவி சத்யவதியை கண்டித்தபோது, ‘கண்ணன் தான் என்னை தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார்’ என முறையிட்டுள்ளார்.

இதைக் கேட்டுக்கொண்ட குமாஸ்தா ஆனந்தன், வழக்கறிஞர் கண்ணனை பலமுறை கண்டித்துள்ளார். எனினும் கண்ணன் தொல்லைகள் தொடர்ந்தது.

இதனால் கோபமான ஆனந்தன் கடந்த சில நாட்களாக கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு வந்தார். ஆனால் அதற்கான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையவில்லை.

இந்தநிலையில் இன்று பணிக்கு வந்த கண்ணன் எப்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே வருவார் என மீன்கொத்தி பறவையாக ஆனந்தன் காத்திருந்தார்.

மதியம் 12.45 மணியளவில் தனது பணி முடிந்து அலுவலகத்திற்கு வந்த கண்ணனை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள தாலுகா ஆபிஸ் சாலையில் வைத்து மறித்துள்ளார். அவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில், ஒருகட்டத்தில் தான் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்தார் ஆனந்தன்.

ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் துடித்த கண்ணனை அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வெட்டிய குமாஸ்தா ஆனந்தன் ஓசூர் நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் உதவியுடன் சரண் அடைந்தார்.

குமாஸ்தா ஆனந்தன்

தஞ்சாவூரில் இன்று காலையில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில், ஓசூரில் பட்டப்பகலில் மதியம் வழக்கறிஞர் ஒருவரை நடுரோட்டில் வைத்து வெட்டிய சம்பவம் அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

உதயநிதியிடம் 25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு : கோர்ட்டு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share