ஒதுக்கப்படாத வீடுகள்… பூட்டை உடைத்து உள்ளே புகுந்த தூய்மை பணியாளர்கள்!

Published On:

| By Raj

கோவையில் உக்கடம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைத்தும் வீடுகளை ஒதுக்கீடு செய்யாததால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். Unallocated houses in Kovai

உக்கடம் சி.எம்.சி காலனி மற்றும் வெரைட்டி ஹால் ரோடு பகுதிகளில் 952 தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதாகக்கூறி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வீடுகளை காலி செய்தது மாநகராட்சி. தொடர்ந்து, 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புல்லுகாடு அருகே தற்காலிக தகரக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இதன் முதல் கட்டமாக உக்கடத்தில் 222 வீடுகளும், வெரைட்டி ஹால் ரோட்டில் 192 வீடுகளும் கட்டப்பட்டன. இவற்றை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆனால், தற்போது வரை பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியிடம் மக்கள் முறையிட்டதாகவும், இதன் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், தற்போது வரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களை வெளியேற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், போலீஸாரின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே, வீடு பெறாத குடும்பத்தினருக்கு தான் முதலில் வீடு கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு இரண்டாம் கட்டமாக வீடுகள் வழங்கக் கூடாது என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர். Unallocated houses in Kovai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share