நா.மணி
வே. சிவசங்கர்
நேற்றைய தொடர்ச்சி…
அமெரிக்க வரலாற்றில், ஒரே காலகட்டத்தில், பிறந்த பெண்களின் தேர்வுகளும், அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும், எப்படி பெண்கள் உழைப்பு சந்தையில் பங்கேற்பதை பாதிக்கிறதோ, அதேபோல், பெண்களின் உழைப்பின் அளிப்பும், இதனை ஒட்டி மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதை தனது ஆய்வுகள் மூலம் கண்டறிந்தது மிக முக்கியமான அவதானிப்பாகும்.
உழைப்பு சந்தையில், ஒட்டுமொத்த பெண்களின் பங்கேற்பை, மதிப்பீடு செய்யும் போது, அவர்களது அனுபவம், கல்வி, பயிற்சி ஆகியவற்றின் விகிதமும் கணக்கில் கொள்ளப்பட்டது. அதாவது, இளம் பெண்கள், வயதில் மூத்தவர்கள், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, கருத்தரித்து இருந்த காலம், ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டது.
பெண்களின் வேலை வாய்ப்புகள், அவர்களது வாழ்க்கை சுழற்சியை ஒட்டியே கட்டமைக்கிறது. இளம் பெண்களின் விருப்பங்களும், வாய்ப்புகளும் மனிதவள முதலீட்டை, தீர்மானிப்பதாக இருக்கிறது. விருப்பங்களும் தேர்வுகளும் மாறும் போது, அவர்களது முடிவும் மாறுகிறது. எனவேதான், பாலின ஊதிய வேறுபாடுகளில், மாற்றங்கள் மெதுவாக நிகழ்கின்றன.
ஆனால், எல்லா காலங்களிலும் ஒரே மாதிரி நிகழ்வதில்லை. அந்த நேரத்தில், விருப்பங்கள் மற்றும் வாய்ப்புகளை பொறுத்து, அவை அமைகின்றது.
அமெரிக்க பாலின ஊதிய வேறுபாடுகள் பற்றிய நீண்ட அவதானிப்புகள்:
எழுபதுகளில் அமெரிக்காவிலும், இதர உயர்ந்த வருவாய் நாடுகளிலும், பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, ஊதிய விகிதம் ஆகியவற்றில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன.
சற்றேறக்குறைய ஆண்களுக்கு இணையாக பெண்களின் வேலை பங்கேற்பு உழைப்பு சந்தையில் அதிகரித்தது. இவ்வாறு அதிகரிக்க, இரண்டு காரணங்களை அவர் அடையாளம் கண்டார். ஒன்று, பெண்களின் தேர்வுகளும் வாய்ப்புகளும். மற்றொன்று, தொழில்நுட்ப மாற்றம்.

2006 ஆம் ஆண்டு கோல்டின் மேற்கொண்ட ஆய்வில், தொடர்ந்து மாறிவரும் காலகட்டத்தில், பெண்களின் உழைப்பு பங்கேற்பு பாதியாக சுருங்கியது. கல்வியில் குறைவாக முதலீடு செய்ய, அதுவே காரணமாக அமைந்தது
1900களின் முதல் பகுதியில், வேலைக்கு வந்த பெண்கள், உழைப்பு சந்தையில் குறைந்த காலமே பங்கேற்க முடிந்தது.
திருமணம், குடும்பம் என்று ஆன பிறகு, அவர்களின் வேலை பங்கேற்பு முடிவுக்கு வந்தது. அது, அப்போது, ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருந்தது. ஆனால், ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும், பணியில் சேர்ந்த இளம் பெண்களுக்கு, திருமணம், குழந்தை என்று ஆன பிறகு வேலையை விட்டுவிட்டு தாயாக வீட்டில் தங்கி விடுவது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை. தங்கள் மகள்களின் கல்வி சார்ந்த முடிவுகளை மேற்கொண்ட பின்னரே, மீண்டும் வேலைக்கு திரும்பும் சூழ்நிலை உருவானது.
ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளுக்கு பிறகு, பணிக்கு வந்த பெண்கள், கணிசமான நேரத்தை தாங்கள் மேற்கொண்ட தொழிலில் முதலீடு செய்ய முடிந்தது. எழுபகளிலும் எண்பதுகளிலும் பணிக்கு வந்த பெண்கள், அதிக காலத்தை தங்கள் வேலையில் செலவழிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதன் காரணமாக, தங்கள் உயர் கல்வியில் அதிக முதலீடு செய்ய முடிந்தது.

2002 ஆம் ஆண்டு கோல்டனும் காட்சும் மேற்கொண்ட ஆய்வில், பெண்கள் தங்கள் தொழிலில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதற்கு காரணம், 60களில் கண்டுபிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகள். இவை பயன்பாட்டுக்கு எளிதானவை. கருத்தரிப்பை பெண்களாகவே கட்டுப்படுத்த முடிந்தது. கருத்தடை வழியாகவே, பெண்களின் உழைப்பு சந்தை பங்கேற்பு அதிகரித்தது என்பது இதன் மூலம் நிரூபணமானது. கல்லூரிகளில் படித்து வந்த பெண்கள், தங்கள் தொழில் வாய்ப்புகளை தேர்வு செய்து கொள்ளவும், திருமணத்தை தள்ளிப் போடவும், கருத்தடை மாத்திரைகள் சிறந்த கருவியாக பயன்பட்டது. அனுமதிக்கப்பட்ட, நம்பத் தகுந்த, கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு கருத்தரிப்பை தள்ளிப் போட வைத்தது. அதன் வழியாக தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான முதலீட்டை அதிக அளவில் மேற்கொள்ள முடிந்தது.

தற்கால பாலின ஊதிய வேறுபாடுகள்
தற்போதைய உயர் வருவாய் நாடுகளில், உள்ள பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிக கல்வி கற்றுள்ளனர். அதேபோல், தொழில் வேலைவாய்ப்புகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். இது, மேலும், மேலும், அதிகரித்து வருகிறது. ஆனாலும், பாலின ஊதிய வேறுபாடுகள் நீடிக்கிறது. பாலின சமத்துவம் ஏற்படுவது சாத்தியம் இல்லை என்பது போல் தெரிகிறது. ஏன் இந்த நிலை? கோல்டினின் ஆய்வுகள் இதற்கும் விடையளிப்பதாக இருக்கிறது. பெண்கள் குழந்தை பராமரிப்பில் ஈடுபடுவதும், பணியிடை நெகிழ்ச்சியற்ற தன்மையுமே இதற்கு காரணம் என்பதை கண்டறிந்தார்.
2014 ஆம் ஆண்டு இவர் மேற்கொண்ட ஆய்வில், பாலின ஊதிய வேறுபாட்டின் மற்றொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தார். கல்வி மற்றும் வேலை தேர்வுக்கான காரணிகள், எவை என்பதை, அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. முன்பு, பாலின ஊதிய வேறுபாட்டுக்கு காரணமாக இருந்ததும், தற்போது பாலின ஊதிய வேறுபாடுகளுக்கு காரணமாக இருப்பதும், ஒன்றல்ல என்பது அவரது ஆய்வில் தெரியவந்தது. முன்பு, பாலின ஊதிய வேறுபாட்டிற்கு காரணமாக இருந்தவை தற்போது அதே அளவில் முக்கியத்துவம் பெற்றதாக இல்லை என்பதும் தெரிய வருகிறது.
தற்போது, சம வேலைக்குள்ளேயே வேறுபாடுகள் உருவாகி உள்ளது என்பதை கோல்டின் ஆய்வு முடிவுகள் வெளிக்கொண்டு வந்தது. இப்படி, சம வேலைக்கு உள்ளேயே, அதிகரித்து வரும் பாலின ஊதிய இடைவெளி உருவாகி, குழந்தை பிறப்பை காரணமாக வைத்து, அதிகரித்து வருகிறது. பணித்தளத்திற்கு வெளியே இருக்கும் நேரமும், பணித்தளத்திற்கு திரும்பும் நேரமும், பெண்களின் ஊதிய விகிதங்களில் பெரும் விளைவுகளை உருவாக்கியுள்ளது. குழந்தை பராமரிப்பு, மற்றும் பணித்தள நெகழ்ச்சிக்காக கூலியை தண்டமாக குறைத்துக் கொள்ள வேண்டியதும் இந்த ஊதிய விகித வேறுபாடுகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்பதையும் இவரது ஆய்வுகள் வெளிச்சம் இட்டுக் காட்டியது.
கொள்கை ஆக்கத்தில் கோல்டின் முடிவுகளின் பங்களிப்பு என்ன?

வரலாற்றையும், பொருளாதாரத்தையும், இணைத்தால், எத்தகைய முடிவுகளை எட்ட முடியும்? அதன் ஆற்றல் என்னவாக இருக்கும்?என்பதற்கு கோல்டின் நடத்திய ஆய்வுகளே சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த காலத்திலிருந்து, கற்றுக் கொள்வதன் மூலம்,பாலின ஊதிய வேறுபாடுகளை நிகழ்காலத்தில், தீர்மான காரணமாக கண்டறிய முடியும். வரலாற்றையும், பொருளாதாரத்தையும் இணைத்து, ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண, பொருத்தி பார்க்க முடியும். இதன் மூலமாக, வரலாற்று பூர்வமான ஒரு பிரச்சினையில், என்ன நடந்தது? ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பதைப் பற்றி, சமூக பொருளாதார மாற்றங்கள் வழியாக கண்டறிய முடிந்துள்ளது. கோல்டினின் ஆய்வுகள், கொள்கை முடிவாக மாறவில்லை என்றாலும், பாலின ஊதிய வேறுபாடுகளை காத்திரமாக கொள்கை முடிவுகளாக மேற்கொள்ள, மதிப்புமிக்க ஆழமான அறிவுச் செல்வத்தை கொடுத்துள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
அமெரிக்காவை மையப்படுத்தி, கோல்டின் மேற்கொண்ட ஆய்வுகள், மற்ற நாடுகளும் கொள்கை வடிவாக்கத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கோல்டின் ஆய்வுகளின் மையப்பொருள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை. கோல்டின் ஆய்வுக்கு பயன்படுத்திய காரணிகளான, ஊதிய வேறுபாடு, மனிதவள முதலீடு , ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள், சமூக மதிப்பீடுகள், தொழில்நுட்ப மாற்றம், உழைப்பு சந்தையின் அமைப்பு முறை, நாட்டிற்கு நாடு வேறு பட்டதாக இருக்கலாம். ஆனால், அடிப்படை தன்மை ஒன்றே.
குறிப்பு:
நேற்றைய தினம் முதல் பகுதி, எங்கள் சக பேராசிரியர்கள் பொருளியல் கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல பின்னூட்டங்களையும் வழங்கி இருந்தார்கள். அதில் குறிப்பாக வாசிங்டனில் உள்ள உலக வங்கியில் பணியாற்றி வரும் நண்பர் பிரசன்னா ஒரு முக்கிய திருத்தம் சுட்டிக் காட்டி இருந்தார். பெண்களின் உழைப்பு சந்தையில் அதன் தேவை மற்றும் அளிப்பை தீர்மானிக்கும் தொன்மையான சில காரணிகளை பட்டியலிட்டிருந்தோம். அவற்றில் Social norms, institutional barriers என்ற பதங்களில், institutional barriers என்பதற்கு நிறுவனத்தடைகள் என்று கூறி இருந்தோம். அதற்கு மாற்றாக வேறு சொல் பயன்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார். அவரது கருத்து சரியே. இங்கு institutional barriers என சுட்டப்படுவது சமூக நிறுவனங்களையே. எனவே, சமூக தடைகள் அல்லது சமூக நிறுவனங்களின் தடை என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. திரு. பிரசன்னா அவர்களுக்கு எங்கள் நன்றி.
கட்டுரையாளர்கள்

நா.மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.
வே.சிவசங்கர்
இணைப் பேராசிரியர் பொருளாதாரத் துறை புதுவை பல்கலைக்கழகம்
நேற்றைய கட்டுரை:
எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தான் விமானங்கள் ரத்து!

Comments are closed.