ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் மலையில் தீபம்.. தடுப்புகளை தாண்டி மலை உச்சிக்கு செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பினர்

Published On:

| By Pandeeswari Gurusamy

Clashes at Thiruparankundram temple

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம் போல் இன்று (டிசம்பர் 3) மாலை கோயில் நிர்வாகம் சார்பில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் தடுப்புகளை தாண்டி மலையில் ஏற முயற்சித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.3) நடைபெறுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் , ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் செயல் அலுவலர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தற்போது வரை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட வில்லை. இந்நிலையில் வழக்கம் போல் கோயில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கிடையில் மதுரை கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் 6 .05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் கோயில் முன் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பினர் தடுப்புகளை மீறி மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் போலீசாருக்கும் இந்து அமைப்பினர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share