கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்வதில் இந்து முன்னணி கட்சியினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, அடிதடி ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த 27ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனால் காலை முதல் பக்தர்கள் கூட்டத்தால் கோயில்கள் நிரம்பி வழிந்தன.
குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் சிலைகள் அதிகமாக பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி பெற்று 2024ஆம் ஆண்டில் சுமார் 35,800 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டன. அதனை மிஞ்சும் வகையில் இந்த ஆண்டு 38,600 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,950 சிலைகளும், அடுத்தபடியாக சென்னை மாநகரத்தில் 1,800 சிலைகளும், கன்னியாகுமரியில் 1,650 சிலைகளும் வைக்கப்பட்டன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி பகுதியில் மட்டும் மொத்தம் 150 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு வைக்கப்படும் சிலைகள், விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் 3வது மற்றும் 5வது நாளில் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் கரைக்கப்படுவது வழக்கம்.
இதற்காக அனைத்து சிலைகளும் மந்தவெளி பகுதிக்கு முதலில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். அங்கிருந்து தான் அணைக்கு வரிசையாக அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஊர்வலத்தில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் மற்றும் கருணாபுரம் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் சிலைகளில், எந்த சிலை முன்னே செல்வது என்பதில் வருடந்தோறும் போட்டி வரும்.
பேச்சுவார்த்தையின் முடிவில் மார்க்கெட் பகுதி சிலை முதலிலும், கருணாபுரம் பகுதி சிலை இரண்டாவதாகாவும் செல்லும். அதனைத் தொடர்ந்து மற்ற பகுதி சிலைகள் அணிவகுக்கும்.
இந்த நிலையில், இந்தாண்டு விநாயகர் சிலையுடன் வந்த இந்து முன்னணி கட்சியினர், தங்களது சிலை தான் முன்னாடி போக வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதற்கு மார்க்கெட் மற்றும் கருணாபுரம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதல் ஏற்பட்டு, அந்த பகுதியே கலவரமானது.
இதனையடுத்து அங்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி மாதவன் தலைமையிலான போலீசார் வந்து கலவரத்தை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் இந்து முன்னணி கட்சியின் சிலையை முதலில் கொண்டு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இதனால் மார்க்கெட் மற்றும் கருணாபுரம் பகுதியில் சிலை வைத்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்கள், “என்ன நீங்க புதுசா வழிகாட்டுறீங்க.. காலங்காலமாக நாங்கள் தான் முன்னாடி போய் கொண்டிருக்கிறோம். நீங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறீங்களா?” என போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு போலீசார், ”இப்போதைக்கு கலவரம் வேண்டாம். இந்த வருடம் அவங்க போகட்டும், அடுத்த வருடம் நீங்க போங்க“ என சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து மாலை 4 மணி முதல் மேளாதளம் முழங்க, பட்டாசுகள் வெடிக்க, விநாயகர் சிலைகள் அணையில் கரைப்பதற்காக ஊர்வலமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
எனினும் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு புகைந்து கொண்டிருப்பதால், மீண்டும் கலவரம் வரலாம் என டிஜிபி அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
