அம்பேத்கர் மணிமண்டபத்தில் அர்ஜுன் சம்பத் : நடந்தது என்ன?

Published On:

| By Kavi

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இன்று அம்பேத்கரின் நினைவு தினம். இதனை முன்னிட்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், கும்பகோணம் நகரில், அம்பேத்கர் காவி உடை அணிந்து, திருநீறு பூசிக்கொண்டு குங்குமம் வைத்திருப்பது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலரால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

காவி(ய) தலைவனின் புகழைப் போற்றுவோம் என்ற வாசகமும் அதில் இடம் பெற்றிருந்தது.

இதுபோன்று போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

ADVERTISEMENT

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தையும் சுவரொட்டிகளை அடித்த மாநிலச் செயலாளர் டி.குருமூர்த்தியையும் கைது செய்ய வேண்டும் என்று கும்பகோணம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தச்சூழலில் குருமூர்த்தி கைதுசெய்யப்பட்டார்.

Clash between vck Hindu People Party ambedkar manimandabam

இந்து மக்கள் கட்சியினரின் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்,

“சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதி மூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை-குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்தசூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் சார்பில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
இதற்காக நீதிமன்றம் வந்த அவர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முயன்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், அவரை தடுத்தனர். அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால் அர்ஜூன் சம்பத் அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியதால் அர்ஜுன் சம்பத்தை வலுக்கட்டாயமாக போலீசார் நீதிமன்றத்தை விட்டு வெளியே கூட்டிச் சென்றனர்.

எனினும் அம்பேத்கர் சிலையிலிருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள பார் கவுன்சில் கட்டிடம் வரை இந்து மக்கள் கட்சி தலைவருக்கு எதிராக வழக்கறிஞர் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

இதனிடையே அர்ஜுன் சம்பத் தொடர்ந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அர்ஜுன் சம்பத் தரப்பில், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி, குங்குமம் பூசவோ மாட்டேன். அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்று, அம்பேத்கர் மணிமண்டபத்தில் 5.45 மணி முதல் 6 மணிக்குள் அஞ்சலி செலுத்த அர்ஜுன் சம்பத்துக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினப்பாக்கம் காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று மாலை அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணி மண்டபத்துக்கு 6.20 மணிக்குச் சென்றார் அர்ஜுன் சம்பத். அவருக்கு விசிக கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விசிகவினர் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். இதையடுத்து விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பிரியா

மத மறுப்பா? மத மாற்றமா?

ஜி20 – எடப்பாடிக்கு அழைப்பு: பன்னீர் எதிர்ப்பு!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share