ADVERTISEMENT

“இனி ஒவ்வொரு மாசமும் கணக்குக் காட்டணும்…” – பள்ளிக்கல்வி இயக்குநர் போட்ட ‘ஸ்டிரிக்ட்’ உத்தரவு!

Published On:

| By Santhosh Raj Saravanan

Circulars on monthly review meeting for education department

சென்னை:

ADVERTISEMENT

“திட்டங்கள் போடுவது முக்கியமல்ல; அது மாணவர்களிடம் போய்ச் சேர்கிறதா என்பதைக் கண்காணிப்பதே முக்கியம்” என்ற அடிப்படையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை நிர்வாகச் சீர்திருத்தங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEOs) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (DEOs) ஒரு அதிரடிச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக, இனி மாதம் தோறும் கட்டாயமாக ஆய்வுக் கூட்டங்களை (Monthly Review Meetings) நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் என்ன இருக்கிறது?

ADVERTISEMENT

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், கூட்டங்களை எப்படி, எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்துத் தெளிவான அட்டவணையே கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்: ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEO) தங்கள் ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

சிஇஓ ஆய்வு: இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மற்றும் பள்ளிகளின் தேவைகள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO), மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

என்ன பேச வேண்டும்?

வெறுமனே கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இருக்க வேண்டும் என்று இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

கற்றல் தரம்: மாணவர்களின் கல்வித்தரம் எந்த அளவில் உள்ளது? மெல்லக் கற்போர் நிலை என்ன?

நலத்திட்டங்கள்: இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள் போன்றவை மாணவர்களுக்குச் சரியாகச் சென்று சேர்ந்துள்ளனவா?

நிர்வாகம்: பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறை பராமரிப்பு மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகள் (Pending Files).

நீதிமன்ற வழக்குகள்: துறை சார்ந்த வழக்குகள் மற்றும் தணிக்கைத் தடைகள் (Audit Objections) மீதான நடவடிக்கைகள்.

அறிக்கை கட்டாயம்:

“கூட்டம் முடிந்த கையோடு, அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விவரங்களை அறிக்கையாகத் தொகுத்து, இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்றும் அந்தச் சுற்றறிக்கையில் கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமே, தரமான கல்வியை உறுதி செய்ய முடியும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது.

கள நிலவரம் என்ன?

ஏற்கனவே பணிச்சுமையில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள், “மாதா மாதம் கூட்டம் என்றால் நிர்வாகப் பணிகளை எப்போது பார்ப்பது?” என்று முணுமுணுத்தாலும், அதிகாரிகளோ, “இது நிர்வாகத்தைச் சீர்படுத்தவே தவிர, சுமையை ஏற்ற அல்ல” என்று விளக்கம் அளிக்கின்றனர்.

இந்தத் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம், அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் நிர்வாகச் செயல்பாடு அடுத்தக்கட்டத்திற்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share