சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி இருக்கும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர், ஃபரூக் ஜே.பாஷா.
முன்னணி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மற்றும் தி கோட் லைஃப் பட ஒளிப்பதிவாளர் கே.எஸ் சுனில் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். தமிழில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
ரிஷி ரிச்சர்ட் நடித்த ருத்ர தாண்டவம், சிம்பு நடித்த பத்து தல, செல்வராகவன், நட்டி நடித்த பகாசுரன், விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாகர்ஜுனா உட்பட பலர் நடித்த, 500 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பலத்த பாராட்டுகளைப் பெற்று வரும் குற்றம் புரிந்தவன் குறித்து ஃபரூக் ஜே.பாஷா கூறுகையில் இயக்குநர் செல்வமணி முனியப்பனின் எழுத்து மற்றும் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இந்த சீரிஸின் திரைக்கதை முழுக்க இயல்புத் தன்மையும், உளவியல் ஆழமும் கொண்டதாக இருந்தது. அதுவே ஒளிப்பதிவின் காட்சியமைப்பை தீர்மானிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வெப் சீரிஸை தயாரித்த நிறுவனத்துடன் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன், இதுவரை நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் குற்றம் புரிந்தவன் எளிதாக இருந்தது. மீண்டும் அவர்களுடன் இணைந்து ஒரு வெப் சீரிஸில் பணியாற்றியது மகிழ்ச்சி.
குற்றம் புரிந்தவன் இந்த அளவு பாராட்டுக்களைக் குவிக்கும் என நினைக்கவில்லை. எல்லோரும் என் பெயரைக் குறிப்பிட்டு பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பொதுவாக திரைப்படங்களுக்கும், சீரிஸிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. படத்தில் இருக்கும் ஹீரோயிஸம், உச்சகட்டங்கள் எதுவும் சீரிஸில் இருக்காது. சீரிஸ் முழுக்க இயல்பான டிராமா இருக்கும். இந்தக் கதை குற்றம் புரிந்தவனின் மனநிலை சம்மந்தப்பட்டது. அதை திரையில் கொண்டு வர, முழுக்க க்ரே டோனில், நிஜத்தில் ஒரு ரூமில் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ அதே போல் ஒளிப்பதிவு செய்தோம். இப்போது ரசிகர்கள் தனியாக குறிப்பிட்டு பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
விளம்பர படங்கள் எப்போதும் ஒளிப்பதிவாளரை நம்பித் தான் இருக்கும், ஒரு நிமிடத்தில் ரசிகனை அசையவிடாமல் இழுத்துப் பிடிக்க வேண்டும். விளம்பரம் ஒவ்வொரு ஃ பிரேமும் அழகாக இருக்க வேண்டும். 500 க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு விளம்பரங்கள் செய்துள்ளேன். எல்லாமே மிகச் சிறந்த அனுபவங்கள்.
எனது விளம்பரப்பட அனுபவத்தில் நடிகர் அமிதாப்பச்சன் சொன்ன நேரத்தில் செட்டில் இருப்பார். அவரது அர்ப்பணிப்பு ஆச்சரியம் தந்தது. நிறைய நடிகர்களுடன் வேலை பார்த்திருந்தாலும் கமல்ஹாசன் சாருடன் மையம் விளம்பரத்துக்காக வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். முதல் முறை வாழ்க்கையில் கூஸ்பம்ஸ் உணர்ந்தேன். அவருடன் வேலை பார்த்த போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
எனது முதல் இரண்டு திரைப்படங்களை ஒப்பிடுகையில் பத்து தல படம் மிகப்பெரிய பட்ஜெட் படம். அப் படத்தின் ரயில் காட்சிக்காக இந்தியா முழுதும் சுற்றினோம். ஆக்சன் காட்சிகள் 200, 300 பேரை வைத்து எடுத்தோம். சிம்பு ஒரு ஜீனியஸ் அவருக்கு எல்லாம் தெரியும், என்ன லென்ஸ், என்ன ஷாட் என எல்லாம் தெரியும், ஏதாவது வித்தியாசமாக செய்தால் உடனே பாராட்டுவார். அப்படத்திற்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது.
ஒரு பெரிய பீரியட் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது என் கனவு. நல்ல திரைக்கதை, நல்ல டிராமா படங்களில் அடுத்தடுத்து வேலை பார்க்க ஆசை. குற்றம் புரிந்தவன் சீரிஸிற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வருகிறது. இயக்குனரின் கனவை அவர் நினைத்தது போல், ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி திரையில் கொண்டு வர வேண்டும் என்பதே விருப்பம்” என்றார்.
ஃபரூக் ஜே.பாஷா ஆகட்டும் ஒளிப்பதிவு பாஷா
— ராஜ திருமகன்
