ஹிட் அடிக்கவேண்டுமென்று நான் வேலைகள் பார்க்கவில்லை. நல்ல பாடல்கள் கொடுக்க வேண்டும் என்றுதான் வேலை பார்த்து வருகிறேன் என்று விருமன் பட விழாவில் யுவன்ஷங்கர் ராஜா பேசினார்
மதுரையில் ‘விருமன்’ பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 3) மாலை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
இதில் நடிகர் சூர்யா, நாயகன் கார்த்தி, நாயகி அதிதி அவரது தந்தையும் இயக்குநருமான ஷங்கர், இயக்குநர் பாரதிராஜா, படத்தின் இயக்குநர் முத்தையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா விழாவைத் தனது பேச்சால் கலகலப்பாக்கினார்.
யுவன் அவுட்
யுவன் சங்கர் ராஜா தனது பேச்சில், “படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. நாளைக்குள் அதை முடித்துவிடுவேன். இயக்குநர் முத்தையா சார் உடன் முதன்முதலாக இணைந்துள்ளேன். படம் அருமையாக உள்ளது. கார்த்தி, சூர்யா, நான் எல்லாம் ஒரு குடும்பம் போல் தான், பள்ளியில் ஒன்றாக படித்தோம். பள்ளிப் படிப்பில் தொடங்கி இவ்வளவு தூரம் வந்தது மிகப்பெரிய பயணம்.
பள்ளியில் ஹவுஸ் கேப்டன் சூர்யா தான். நான் எப்போதும் பள்ளிக்கு ஷூ, யூனிபார்ம் ஒழுங்காக அணியாமல் செல்வேன். ஆனால், அவர் பெர்ஃபெக்ட்டாக அணிந்து பள்ளிக்கு வந்து ‘யுவன் அவுட்’ என்று பள்ளி மைதானத்தில் என்னை ஓடவைப்பார். அன்றைக்கு என்னை ஓடவைத்ததற்கு நிறைய பாடல்கள் கொடுத்து அவரை ஆட வைத்தேன்” என்று கலகலப்பூட்டினார்.
வேஷ்டி கெட்டப் ஏன்?
முன்னதாக, விழாவுக்குக் கைலி வேஷ்டி கெட்டப்பில் யுவன் வந்திருந்ததைத் தொகுப்பாளர் சுட்டிக்காட்டிக் கேட்க அதற்குப் பதில் கொடுத்தவர், “அதற்குக் காரணம் எனது மனைவிதான். மதுரை போவதற்காக இந்த ஆடையை அவர் தான் கொடுத்தார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.
எப்போது எந்த போட்டோ ஷூட், நிகழ்ச்சி என்றாலும் எனது மனைவியே உடையைத் தேர்வு செய்வார். எல்லோரும் மனைவி சொல்லைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்” என்றதும் மேடையிலிருந்த இயக்குநர் ஷங்கர், சூர்யா, கார்த்தி உட்பட அனைவரும் சிரித்தனர். தனது பேச்சின் முடிவில், மதுரையில் கூடிய விரைவில் இசை நிகழ்ச்சி நடத்துவேன் எனக் கூறி ரசிகர்களையும் குஷிப்படுத்தினார்.
இராமானுஜம்
அமிதாப்- தர்மேந்திரா போல சூர்யா-கார்த்தி?