துபாயில் செட்டில் ஆன யுவன்

சினிமா

இளையராஜாவின் மகன் என்கிற அறிமுகத்துடன் 1996-ஆம் ஆண்டு தனது 16 வயதில், ’அரவிந்தன்’ என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் யுவன் ஷங்கர் ராஜா.

இளையராஜா மகன் என்பதை  கடந்து தனது தனித்திறமையால் தனுஷ் நாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை (2001) படத்தின் இசை மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானார்.

கடந்த 22 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜா, 2014-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவி அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். அதற்கு அடுத்த ஆண்டிலேயே  ஷாஃப்ரூன் நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

தீவிர இடதுசாரி கலைஞராக வாழ்ந்து மறைந்த பாவலர் வரதராஜனின் சகோதரர்களான இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் இந்துமதம், ஆன்மீகத்தில் தீவிர பற்று கொண்டவர்கள். அவர்களின் குடும்ப வாரிசான யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை தழுவியது அவரது குடும்பத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மதசார்பற்ற நாட்டின் குடிமகனாக இருந்தவர் தற்போது இஸ்லாம் நாட்டுக்கு குடிபோயிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா, குடும்பத்துடன் சென்னையிலிருந்து வெளியேறி துபாயில் குடியேறிவிட்டாராம். அங்கேயே ஓர் அதிநவீன ஒலிப்பதிவுக்கூடத்தையும் அமைத்திருக்கிறாராம். பாடல் பதிவு, பின்னணி இசைச் சேர்ப்பு ஆகிய அனைத்தையும் அங்கிருந்தே அவர் செய்கிறார்.

இப்போது, விஜய் 68, கவின் நடிக்கும் ஸ்டார், சதீஷ் நடிக்கும் காஞ்சுரிங் கண்ணப்பன், அமீரின் மாயவலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

புதிதாக ஒரு படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சந்திக்கக் கேட்பவர்களை துபாய் வரச் சொல்கிறாராம். அப்படிச் செல்ல இயலாதவர்கள் காணொலிக்காட்சி மூலமாகக் கதை சொல்லலாமாம்.

பாடலுக்கான மெட்டுகளை உருவாக்கி அதை இணையம் மூலம் இங்கு அனுப்பிவிடுகிறாராம். பாடல்பதிவுக்கு அங்கு செல்ல இயலாத பாடகர்கள் இங்கிருந்தே பாடி அனுப்பினால் போதும். அதை ஒலிக்கலவை செய்து அனுப்பிவிடுகிறாராம்.

தொழில்நுட்பங்கள்  வளர்ந்துவிட்டதால், எல்லா வேலைகளும் இணையம் மூலமே நடந்துகொண்டிருப்பதை யுவன் ஷங்கர் ராஜா பயன்படுத்துகிறார். அவர் நேரில் வந்தாக வேண்டும் என்று தேவைப்படும் நேரத்தில்  சென்னை வருகிறாராம் என்கின்றனர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நெருக்கமானவர்கள்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உதயநிதி

தமிழ், தெலுங்கு என பிரிக்க தேவையில்லை: நானி

+1
3
+1
1
+1
2
+1
8
+1
6
+1
4
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *