யுவன் 26 – திருப்தியைத் தேடும் இசைப் பயணம்!

சினிமா

கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தபோதும், அவர்களது எதிரில் எப்போதும் யுவன்சங்கர் ராஜா மட்டுமே இருந்து வருகிறார். மாரி 2 பட பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் சொன்னது இது.

திரையுலகில் ஏற்ற இறக்கங்களைப் பலமுறை கண்டபோதும், அவரது இசை கொண்டாடப்படுவதும் அணுஅணுவாகச் சிலாகிக்கப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றோடு, அவரது இசை திரையில் ஒலிக்கத் தொடங்கி 26 ஆண்டுகள் ஆகிறது.

முதல் படம்!

’அரவிந்தன்’ – யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் படம். அந்த வாய்ப்பு கிடைத்தபோது, அவரது வயது 16.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த விரும்பினார் தயாரிப்பாளர் டி.சிவா. 1996இல் அவரது தயாரிப்பில் ‘மாணிக்கம்’ வெளிவந்தது. ஆனால், அது நீண்டகாலமாகத் தயாரிப்பில் இருந்த காரணத்தால் இரண்டாவதாக இசையமைத்த ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ முன்னதாக வெளியானது,

அந்த காலகட்டத்தில் தான், ’அரவிந்தன்’ படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் எண்ணத்தில் இளையராஜாவைத் தேடி வந்திருக்கிறார் சிவா. அப்போது, பள்ளிக்குச் செல்லாமல் இருந்த யுவனைப் பார்த்து நலம் விசாரித்திருக்கிறார். அவரிடம் ‘மியூசிக் பண்ண சான்ஸ் இருந்தா சொல்லுங்க’ என்று வெகு இயல்பாகச் சொல்லியிருக்கிறார் யுவன். இதனை சிவா இளையராஜாவிடம் சொல்ல, ‘அரவிந்தன்’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு யுவனுக்குக் கிடைத்திருக்கிறது.

Yuvan 26 A musical journey

1995இல் ‘அரவிந்தன்’ படப்பிடிப்பு தொடக்கவிழாவின்போது திரையிடப்படுவதற்காக தமிழ், இந்தி, தெலுங்கில் ஒரு ட்ரெய்லர் உருவாக்கப்பட்டது.

அதற்கான பின்னணி இசையை அமைத்ததோடு ‘ஆல் தி பெஸ்ட்’, ‘பூவாட்டம் காயாட்டம்’ எனும் இரண்டு பாடல்களையும் ஒரே நாளில் முடித்துக் கொடுத்திருக்கிறார் யுவன். இம்மூன்றும் அவ்விழாவில் ஒலித்துள்ளது. இந்த ஒரு சம்பவமே, திரையுலகின் மீது யுவன் கொண்டிருந்த வேட்கை எத்தகையது என்பதைச் சொல்லும்.

மிகப்பிரமாண்டமாகத் தயாரானபோதும், ‘அரவிந்தன்’ வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது. அதனால், வேறு பட வாய்ப்புகள் வராமல் இருந்ததை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இறுதியாக, 1997 பிப்ரவரி 28இல் படம் வெளியானது; பெரிய வரவேற்பைப் பெறாமல் முடங்கியது. அதனால், யுவன் இசையும் ரசிகர்களால் கவனிக்கப்படாமல் போனது.

இப்படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களும் இனிக்கும் என்றபோதும்,  இன்றும் எஸ்.பி.பி, மகாநதி ஷோபனாவின் குரல்களைத் தாங்கிய ‘ஈரநிலா’ பாடல் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது.

பெருவெற்றிக்கான ஏக்கம்!

அரவிந்தனுக்குப் பிறகு, 1998இல் ‘கல்யாண கலாட்டா’, ‘வேலை’ என்ற இரு படங்களில் இசையமைத்தார் யுவன். இப்போதும் அப்பாடல்களைக் கேட்டால் ‘ஆஹா’ என்று தோன்றும். நாயகன் நாயகி அறிமுகப் பாடல், காதல் கலாட்டாக்கள், சீண்டல்கள் தாண்டி பழைய இளையராஜா படம் போல இதில் பாடல்களுக்கான சூழல் அமைக்கப்பட்டிருந்தன.

வெறுமனே காதலை மட்டுமே மையப்படுத்தி பாடல்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவை எடுபடவில்லை. ஒரு படமாகவும் கொண்டாடப்படவில்லை.

ஆனாலும், ‘கல்யாண கலாட்டா’வில் இடம்பெற்ற ‘ஆதாம் ஏவாள்”, ‘வெள்ளிமலை காட்டுக்குள்ள’, ‘அடியே குருவம்மா’ பாடல் இன்றைய இன்ஸ்டாரீல்ஸுக்கும் பொருத்தமானதாக இருப்பதை உணர முடியும். போலவே ‘வேலை’யில் உதித் நாராயணன், ஸ்வேதா பாடும் ‘குன்னூரு பூச்சட்டி’ மற்றும் ஹரிஹரன், பவதாரிணியின் ‘ஓய்வெடு ஓய்வெடு நிலவே’ பாடல்கள் இப்போதும் கொண்டாடத்தக்கவைதான்.

’வேலை’யில் இடம்பெற்ற ‘காலத்துக்கேத்த ஒரு கானா’வை நாசர், பிரேம்ஜி உடன் இணைந்து பாடியது நடிகர் விஜய் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அதே விஜய்க்காக, பின்னாட்களில் ‘புதிய கீதை’ எனும் படத்தில் மட்டுமே யுவன் பணியாற்றினார். அதில் வரும் ‘மெர்க்குரி பூவே’, யுவனின் தனித்துவமான ஸ்டைலில் அமைந்திருக்கும்.

1999இல் வசந்த் இயக்கத்தில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, சுந்தர்.சி இயக்கத்தில் ‘உனக்காக எல்லாம் உனக்காக’ எனும் இரு படங்களில் பணியாற்றினார் யுவன். இரு படங்களுமே பெரிய வெற்றியைச் சுவைக்காத காரணத்தால் சாதாரண மக்கள் யுவனைக் கொண்டாடவில்லை.

2001 தைப்பொங்கல் அன்று வெளியான ‘தீனா’, மேற்சொன்ன படங்களின் வெற்றியைச் சேர்த்தாற்போல யுவனுக்குப் பெற்றுத் தந்தது. அன்று முதல் யுவனின் பெருவெற்றிக்கான ஏக்கம் தீர்ந்தது. யுவன் இசை இருக்கிறதா என்று விநியோகஸ்தர்களும் திரையரங்க அதிபர்களும் நோக்கும் நிலைக்கு ஆளானார்.

அதன்பிறகு மனதைத் திருடிவிட்டாய், நந்தா, துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், பாலா, மவுனம் பேசியதே, புன்னகைப் பூவே என்று வரிசையாகப் பல படங்கள் யுவன் இசையமைத்த காரணத்திற்காகவே ரசிகர்களின் கவனத்திற்கு உள்ளாகின.

Yuvan 26 A musical journey

ஒரேவிதமான இசை!

காலத்திற்கேற்ப மாறினாலும், வெற்றி தோல்விகளால் தாக்குண்டபோதும், யுவன் தரும் இசையில் வித்தியாசம் சிறிதும் இருக்காது. பிரமாண்டமான படம் என்றாலும், குறைந்த பட்ஜெட் தயாரிப்பு என்றாலும் எல்லாவற்றுக்கும் ஒரேவிதமான இசை என்பதே அவரது தாரக மந்திரம். அப்பாடல்களும் பின்னணி இசையும் கொண்டாடப்படுவது அன்றைய சூழலையும் படத்தின் உள்ளடக்கத்தையும் பொறுத்தது. அதனாலேயே, யுவன் இசையமைத்து பெரிதாக வெற்றியைச் சுவைக்காத படங்களில் கூட முத்துக்கள் போன்ற பாடல்களை அள்ள முடியும்.

இவ்வளவு ஏன், யுவன் இசையமைத்து வெளிவராத படங்களே அரை டஜனுக்கும் அதிகமாக உள்ளன. இத்தனைக்கும் அவர் நின்று நிதானித்து தனக்கான வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பு கொண்டவர்.

அகத்தியன் இயக்கத்தில் பஞ்சு சுப்பு தயாரித்த ‘காதல் சாம்ராஜ்யம்’ திரைப்படம் அந்த வரிசையில் இடம்பெறும். இதில் இடம்பெற்ற ‘இது கண்கள் சொல்லும் காதல் சேதி’, இன்றைய தலைமுறையின் மொபைல் ரிங்டோன் ஆகும் வல்லமை கொண்டது. ’உள்ளம்’ படத்தில் வரும் ‘கண்ணை திறந்து நான் பார்க்கையிலே’, ‘பேசு’வில் இடம்பெற்ற ’வெண்ணிற இரவுகள்’, ’காதல் 2 கல்யாணம்’ படத்தின் ‘இது காதலாய் இருந்திடுமோ’, ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ‘ஈரக்காத்தே நீ வீசு’ போன்ற பாடல்கள் அதற்கான மேலும் சில உதாரணங்கள்.

இதேபோல படம் வெளியான காலகட்டத்தில் கவனிக்கப்பெறாமல்போன பாடல்களும் உண்டு. ’மாரி2’வில் வரும் ‘ரௌடி பேபி’ போல உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவையும் உண்டு; ‘லவ் டுடே’ போல ரசிகர்கள் பெருவெற்றியைத் தர விசிட்டிங் கார்டாக மாறியவையும் உண்டு. இசையும் தொழில்நுட்பமும் ஒன்றோடொன்று இறுகப் பற்றியபோதும், அதில் தென்படும் எளிமைதான் யுவனைக் கொண்டாடுவதற்கான காரணம்.

தொடர்ச்சியாக யுவனின் பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருந்தால், கால மாற்றங்களை மீறி இனி வரும் தலைமுறையையும் ரசிக்கவைக்கும் அம்சம் அவற்றில் நிறைந்திருப்பதை உணர முடியும். அப்படியொரு திறமை தன்னுள் இருக்கிறது என்பதை ‘அரவிந்தன்’ காலத்திலேயே உணர்ந்தவர் யுவன். அதற்கான பலனைத்தான் இன்று ரசிகர்களான நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய தலைமுறையைப் பொறுத்தவரை, காதலின் வெவ்வேறு பரிமாணங்களைத் தன் இசையில் நிரப்பியவர் யுவன். ஆனால், அவரே தனக்குப் பிடித்தமான காதல் பாடலைத் தான் இதுவரையில் இசைக்கவில்லை என்றிருக்கிறார். திருப்தியைத் தேடும் அப்பயணத்தினால், இன்னும் பல பாடல்கள் நமக்குக் கிடைக்கலாம்.

யுவன் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், ‘பட்டியல்’ படத்தில் பா.விஜய் எழுதிய ‘போகப் போக பூமி விரிகிறதே’. இது தரும் உத்வேகத்தைப் பல படங்களில், பாடல்களில் தந்திருக்கிறார் என்பதே யுவனிசையின் சிறப்பு.

இன்றைய சூழலில், யுவன் இசையமைப்பினால் புதியவர்கள் அடையாளம் காணப்படுவதே அவருக்கான பெருமை. இசை நுட்பங்கள் தாண்டி, சக கலைஞர்களை அரவணைத்துச் செல்லும் திறத்தாலேயே இன்றும் புகழ் வெளிச்சத்தில் ஒளிர்கிறார் யுவன். வெறுப்பையும் அவதூறுகளையும் அன்பின் துணை கொண்டு கடந்து செல்கிறார். இன்றும் என்றும் அந்த அன்பு சூழ் நெஞ்சம் தொடரட்டும்!

உதய் பாடகலிங்கம்

மணீஷ் சிசோடியாவின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

“க்ளைமாக்ஸை இப்போதே கேட்டால் எப்படி”?: திமுக கூட்டணி குறித்து கமல்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
2