பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கார் இன்று (ஜூலை 4) விபத்தில் சிக்கியது.
கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி அதனைத் தனது ‘twin throttlers’ என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது ஒரு புறம் இருந்தாலும் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி அடிக்கடி வழக்குகளில் சிக்குவதும் உண்டு.
குறிப்பாக டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூப்பில் பதிவிட்டதற்கு கோவை மாநகர காவல்துறை கடந்த செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் தான் டிடிஎஃப் வாசன் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ’மஞ்சள் வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசன் பிறந்தநாளான கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுப் படக்குழு அறிவித்திருந்தது.
மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பிற்காக டிடிஎஃப் வாசன் சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், டிடிஎஃப் வாசன் சென்ற கார் சென்னை அமைந்தகரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் டிடிஎஃப் வாசன் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். இந்த விபத்து தொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா