யோகிபாபுவின் ’காமெடி கபடி’
’டேய் இதை சட்னின்னு சொன்னா இட்லி கூட நம்பாதுடா’ என்றொரு வசனம் ‘சூது கவ்வும்’ படத்தில் வரும். போலவே, மனதைத் திருடிவிட்டாய் படத்தில் வடிவேலுவைப் பார்த்து விவேக் சொல்லும் ‘புட் சட்னி’ என்றொரு வசனம் ரசிகர்களிடத்தில் பிரபலம். அதனாலேயே ‘சட்னி சாம்பார்’ என்ற டைட்டில் சட்டென்று பிடித்துப் போனது. அதற்கேற்றாற்போல, அந்த வெப்சீரிஸுக்கான ட்ரெய்லரையும் அர்த்தப்பூர்வமாக ‘கட்’ செய்திருந்தது இயக்குனர் ராதாமோகன் & குழு.
விழுந்து விழுந்து சிரிக்கத்தக்கதாக இல்லாமல், அதேநேரத்தில் கண்டிப்பாகப் புன்னகைத்துவிட்டு அடுத்த காட்சியை ரசிகர்கள் நோக்குவார்கள் என்று உத்தரவாதம் அளிக்கிற வகையில், சிறப்பான ‘பீல்குட்’ அனுபவங்களைத் தந்தவர் ராதாமோகன்.
ஏற்கனவே ஜீ5 தளத்திற்காக ‘மலேசியா டூ அம்னீசியா’ படத்தை இயக்கியவர், இம்முறை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திற்காக முதன்முறையாக ஒரு வெப்சீரிஸ் தந்திருக்கிறார். இதில் யோகிபாபு தான் நாயகன் என்று தெரிந்தபோது நமது எதிர்பார்ப்பு பன்மடங்கானது.
ஆறு எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸை முழுதாகப் பார்த்தபிறகும் அந்த எதிர்பார்ப்பு என்னவானது? நல்லதொரு திருப்தியை இப்படைப்பு தந்ததா?
இரண்டு பொண்டாட்டி கதை!
ஊட்டியில் ‘அமுதா கபே’ என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார் ரத்தினசாமி (நிழல்கள் ரவி). அவரது மனைவி ஜெயலட்சுமி (மீரா கிருஷ்ணன்). அந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்.
மகள் அமுதா (மைனா நந்தினி), அவரது கணவர் இளங்கோ (நிதின் சத்யா), பேரன் அப்பு (ஆர்யன்) மூவரும் ரத்தினசாமி வீட்டில் இருக்கின்றனர். மகன் கார்த்திக் (கயல் சந்திரமௌலி) மச்சான் உடன் இணைந்து மசாலா பொடி நிறுவனமொன்றை நடத்தி வருகிறார்.
மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் ரத்தினசாமி, ஜென்சி (சம்யுக்தா விஸ்வநாதன்) எனும் பெண்ணை மகன் விரும்புவது அறிந்து பெண் கேட்டுச் செல்கிறார். ஆனால், கனத்த மனதுடன் திரும்பி வருகிறார். ஜென்சியின் தந்தை பெண் தர மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்.
அதன்பிறகு, ரத்தினசாமி ரொம்பவே சோர்ந்து போகிறார். திடீரென்று உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிறார். ஒருநாள் கார்த்திக்கை அழைத்து, தான் சென்னையில் இருந்தபோது ஒரு பெண்ணோடு வாழ்ந்ததாகவும், அப்பெண்ணுக்குத் தன் மூலமாக ஒரு மகன் இருப்பதைச் சமீபத்தில் அறிந்து கொண்டதாகவும் சொல்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா. அதனைக் கேட்டதும் கார்த்திக் இன்னும் அதிர்ச்சியடைகிறார்.
அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ‘அப்பாவின் ஆசை என்ன’வென்று கேட்கிறார். ’அப்பெண்ணின் மகனைச் சகோதரனாக ஏற்றுக்கொண்டு, என்னைப் பார்க்க அழைத்து வருவாயா?’ என்கிறார். கார்த்திக்கும் ‘சரி’ என்கிறார்.
கார்த்திக், இளங்கோ, டிரைவர் பீட்டர் மூவரும் (இளங்கோ குமரவேல்) சென்னை செல்கின்றனர். பல இடங்களில் தேடியலைந்து, அமுதாவின் மகன் சச்சின் பாபு எனும் விக்னேஷ் பாபுவை (யோகி பாபு) கண்டறிகின்றனர். தந்தையின் பெயரை எடுத்தாலே அமிலத்தில் தோய்த்த வார்த்தைகளை உமிழும் அவரை, மூவரும் ஏமாற்றி ஊட்டிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சச்சினைப் பார்த்த அடுத்த நொடியே ரத்தினசாமி மரணமடைகிறார். அதன்பிறகு ஈமச்சடங்குகளில் வேண்டா வெறுப்பாகக் கலந்து கொள்கிறார் சச்சின். இறுதியாக, 13ஆம் நாள் காரிய நிகழ்விலும் அவர் இருக்க வேண்டும் என்கிறார் கார்த்திக். முதலில் மறுத்தாலும், வேறு வழியில்லாமல் அங்கு தங்கச் சம்மதிக்கிறார் சச்சின்.
ஏட்டிக்குப் போட்டியாக எல்லோரிடமும், எல்லாவற்றையும் அணுகும் சச்சின், ஒருகட்டத்தில் ரத்தினசாமி பலருக்கு நல்லவராக, அவர்களது வாழ்வை மேம்படுத்தியவராக விளங்கியதை அறிகிறார். மெல்ல மெல்ல மனம் மாறுகிறார்.
இதற்கிடையே, கார்த்திக் வீட்டில் சமையல் வேலை செய்யும் சோபி (வாணி போஜன்) உடன் பழகத் தொடங்குகிறார் சச்சின். அப்பெண்ணுக்கு ஒரு ரவுடியோடு திருமணமாகி, பின்னர் விவாகரத்து ஆனதை அறிகிறார். சோபியின் தந்தை சுப்பையா (சார்லி) பணத்திற்காக எதைச் செய்யவும் தயாராக இருப்பவர் என்பதை அறிந்து, அவர் மூலமாக மீண்டும் தூண்டில் போடுகிறார் சோபியின் மாமியார் (பிரியதர்ஷினி ராஜ்குமார்). அதற்காகச் சில சதிச்செயல்களில் ஈடுபடுகிறார்.
சோபி நல்லவிதமாக வாழ வேண்டும் என்று எண்ணும் சச்சின், மெல்லத் தனக்கும் ரத்தினசாமிக்கும் பலவகையில் ஒற்றுமைகள் இருப்பதை உணர்கிறார். இந்த நிலையில், அவர் யார் என்ற உண்மை கார்த்திக்கின் தாய்க்கும் தங்கைக்கும் தெரிய வருகிறது. அதனைக் கேட்டதும், சச்சினின் தாய் அமுதாவைப் பற்றி இழிவாகப் பேசுகிறார் ஜெயலட்சுமி. அது, சச்சினனிடத்தில் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘சட்னி சாம்பார்’ரின் மீதி.
ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள் என்ற கதையைச் சில தமிழ் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். பாலு மகேந்திரா அதையே கருவாகக் கொண்டு, மூன்று வெவ்வேறுவிதமான திரைக்கதைகளைத் தந்திருக்கிறார். மணிரத்னம் ‘அக்னி நட்சத்திரம்’ என்ற ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறாத ஒரு கமர்ஷியல் படமொன்றை தந்திருக்கிறார்.
ராதாமோகனும் கூட, இதே கதையம்சத்துடன் ‘மலேசியா டூ அம்னீஷியா’ தந்தார். அந்த ஒப்பீடுகள் ஏதும் மனதில் எழாத அளவுக்கு, தொடர்ந்து சிரித்தவாறே இருக்கும் வகையில் ‘சட்னி சாம்பார்’ தந்திருக்கிறார்.
யோகிபாபு கலக்கல்!
‘சிரிப்பே வரலை’ என்று வெகுவாக யோகிபாபுவின் நகைச்சுவைக் காட்சிகள் கலாய்க்கப்படும் நிலையில், இதில் அவரது நடிப்பு நம்மை உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க வைக்கிறது. கொஞ்சம் கவுண்டமணி, கொஞ்சம் தங்கவேலு, கொஞ்சம் சுருளிராஜன் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார் மனிதர். போலவே, சென்டிமெண்ட் காட்சிகளில் நம் கண்களைக் குளமாக்குகிறார். யோகிபாபு நடிக்கும் முதல் வெப்சீரிஸ் இதுவே.
நிதின் சத்யாவும் இளங்கோ குமரவேலும் யோகிபாபுவுடன் இதில் ‘காமெடி கபடி’ ஆடியிருக்கின்றனர். அது போதாதென்று, சீரியசான பாத்திரத்தில் நடித்து சிரிப்பூட்டுகிறார் சார்லி. இது போன்ற பாத்திரங்களை எம்.எஸ்.பாஸ்கருக்கு தருவது ராதாமோகனின் வழக்கம். இம்முறை அந்த வாய்ப்பு சார்லிக்குக் கிடைத்திருக்கிறது.
சந்திரமௌலிக்கு இதில் சீரியசான பாத்திரம். எண்பதுகளில் வெளியான மோகன், சுரேஷ், கார்த்திக் படங்களை நினைவூட்டுவது போல இதில் அவர் வந்து போயிருக்கிறார்.
நிழல்கள் ரவிதான் இக்கதையின் மையம். ஆனால், அவருக்கு இதில் ஓரிரு காட்சிகளே தரப்பட்டுள்ளன.
வாணி போஜன் இதில் சோபியாக நடித்துள்ளார். நாயகி என்றில்லாமல் ஒரு பாத்திரமாகத் தோன்றியிருக்கிறார். மைனா நந்தினி, மீரா கிருஷ்ணன், தீபா சங்கர், பிரியதர்ஷினி ராஜ்குமாருக்கு அளந்து வைத்தாற்போன்று காட்சிகள் தரப்பட்டுள்ளன. அவர்கள் அப்பாத்திரங்களைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளனர்.
’கட்சி சேரா’ பாடலில் நம்மைக் கவர்ச்சியால் சுண்டியிழுத்த சம்யுக்தா விஸ்வநாதன், இதில் சந்திரமௌலியின் ஜோடியாக வருகிறார். ‘அவர்தானா இவர்’ எனும் அளவுக்கு இதில் நடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து மோகன் ராம், ஏன்சலின் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
நிழல்கள் ரவியின் பேரனாக வரும் ஆர்யனும் நம் மனதைக் கவர்ந்திழுக்கிறார்.
நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமல்லாமல், மனதை நெகிழ வைக்கும் இடங்களிலும், காட்சியின் தன்மையை மேலுயர்த்தப் பாடுபட்டிருக்கிறது அஜீஷின் இசை.
பொன். பார்த்திபனின் வசனங்கள் சிரிக்க வைப்பதோடு நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன. ‘என் பேரைத்தான் கடைக்கு வச்சிருக்காருன்னு நினைச்சா, எனக்கே அவ பேரைத்தான் வச்சிருக்காரு’ என்று மைனா நந்தினி பேசும்போது, சீரியசான காட்சி என்பதையும் மறந்து சிரிக்கத் தோன்றுகிறது. போலவே, யோகிபாபு – இளங்கோ குமரவேல் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் வசனங்கள் நகைக்க வைக்கின்றன. குமரவேல் சிரித்துக்கொண்டே நடிப்பதில் இருந்தே அவ்வசனங்களின் பலம் என்னவென்பதை அறியலாம்.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு, ஜிஜேந்திரனின் படத்தொகுப்பு மற்றும் இதர தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, கண்ணுக்குக் குளுமையானதொரு படைப்பை உருவாக்கத் துணை நின்றிருக்கின்றன.
வெல்கம் ராதாமோகன்!
‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் என்றபோதும், சில இடங்களில் சீரியல் தொனி தென்படுகிறது. பரபரப்போ, பெரிய திருப்பங்களோ இதில் இல்லை. அதனால், ஒரு படம் பார்க்கிற உணர்வு எழவில்லை. ரிமோட்டை கீழே வைக்காத அளவுக்கு ஒரே வீச்சில் பார்க்கும்படியான வெப்சீரிஸ் ஆகவும் இது இல்லை. நிச்சயமாக, ராதாமோகனின் எழுத்தாக்கமும் காட்சியாக்கமுமே அதற்குக் காரணம்.
அதேநேரத்தில், இந்த படைப்பு நமக்கு ஒருவிதமான ஆசுவாசத்தைத் தருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘உப்புக்கருவாடு’, ‘அழகிய தீயே’ என்று ராதாமோகன் தந்த ‘பீல்குட்’ படங்கள் தமிழில் நாம் இதுவரை காணாத அனுபவங்களைத் தருகிறவை. அதேபோல, வெப்சீரிஸ் என்றாலே வன்முறை, அருவெருப்பூட்டும் வசனங்கள், ஆபாசக் காட்சிகள், மோசமான பிரச்சனைகளை மையமாகக் கொண்டவை என்பதிலிருந்து விலகி நின்று கதை சொல்லியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ராதாமோகன் கையாண்டிருக்கும் இந்த கதை சொல்லல், வெப்சீரிஸையும் குடும்பத்தோடு காணலாம் என்ற உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு வேறு பலரும் படைப்புகளை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது.
’சட்னி சாம்பார்’ வெப்சீரிஸில் ராதாமோகன் முத்திரையை நாம் உணரும் காட்சிகள் உண்டு. ‘டாய்லெட்டுல போய் யூரின் போனா குஞ்சானை அனகோண்டா பாம்பு கடிச்சிரும்’ என்ற பயத்தில் வீட்டுக்குள் வாளியைத் தூக்கிக் கொண்டு தெரியும் சிறுவன் அப்புவை, ‘இனி டாய்லெட்டுலயே யூரின் போறேன்’ என்று சொல்ல வைப்பார் யோகிபாபு. அந்த மாற்றத்தைச் சொல்லுமிடம் அருமை.
தனது தந்தை ஏன் தாயை விட்டுப் பிரிந்தார் எனும் உண்மையை யோகிபாபு பாத்திரம் அறியுமிடமும், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் நெஞ்சை நெகிழ வைப்பவை. அதேபோல, ‘நம்ம ஹோட்டல்ல சாம்பார் ஸ்பெஷல்ங்கற மாதிரி, அவனோட கடையில சட்னி ஸ்பெஷல்; ரெண்டையும் ஒரே இடத்துல கிடைக்கற மாதிரி செஞ்சா எப்படியிருக்கும்’ என்ற கேள்விக்கு சந்திரமௌலி பாத்திரம் பதில் சொல்லுமிடம், நம்பிக்கை வறட்சியில் இருப்பவரை அருவிக்குளியலுக்கு ஆளாக்குவது. அதனாலேயே, இப்படியொரு வெப்சீரிஸை தர முன்வந்த இயக்குனருக்கு நெகிழ்ந்த மனதோடு ‘வெல்கம்’ சொல்லத் தோன்றுகிறது.
ராதாமோகன் மாதிரியான படைப்பாளிகளிடம் ‘இதை இதைத்தான் எதிர்பார்க்கிறோம்’!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
ராகுல் காந்தியின் சாதி… ’அனுராக் சர்ச்சை பேச்சு : ஷேர் செய்த மோடி – காங்கிரஸ் பதிலடி!
வயநாடு நிலச்சரிவு : உதவிக்காக களமிறங்கிய பிரபல நடிகை – வீடியோ வைரல்!