வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஆறு நேரடி தமிழ் படங்கள் வெளியாக உள்ளது.
வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ. கணேஷ் வழங்க புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’.
தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சக்கரவர்த்தி இசையமைப்பில், ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார், செம்மலர் அன்னம், சுபத்ரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாத்திசை’.
7ஆம் நூற்றாண்டு காலத்தில் நடக்கும் கதையைக் கொண்ட சரித்திரப் படமாக உருவாகியுள்ளது
இப்படம் ஏப்ரல் 21ம் தேதியன்று வெளியாக உள்ளது. ட்ரைலர் வெளியான ஆறு நாட்களில் ஆறு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. இப்படத்தின் ட்ரெய்லர் பற்றி சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
பிரம்மாண்டமான காட்சிகள், அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் கதாபாத்திரங்கள், சங்க கால பயன்பாட்டுதமிழ் வசனங்கள், போர்க்களக் காட்சிகள் என ட்ரெய்லரில் பல விஷயங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
“ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரப் பாண்டியன் என்ற பாண்டிய இளவரசரைப் பற்றிய புனைவுக் கதையுடன் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றுடன் கதை சொல்லப்பட்டுள்ளது.
களப்பிரர்கள் காலம் முடிவுக்கு வந்த பின் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையேயான போட்டியில் பாண்டிய மன்னனான ரணதீரப் பாண்டியன் சேரர்களையும், சோழர்களையும் போரிட்டு வீழ்த்துகிறான்.
வடக்கில் பல்லவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்க, கீழே சோழ தேசத்தில் இருந்து ரணதீரன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். போரில் தோல்வியுற்ற சோழர்கள் காட்டுக்குள் பதுங்கி விடுகிறார்கள். பேரரசுகளுக்கிடையே போர் நடைபெறும் போது சிற்றரசர்களும், சிறு சிறு கூட்டத்தினரும் ஆதரவாக வருவார்கள்.
அது போல சோழர்களுக்கு, எயினர்கள் என்ற பழங்குடி கூட்டத்தினர் ஆதரவாக வருகிறார்கள். ஆனால், பாண்டியர்களை உங்களைப் போன்ற சிறு கூட்டத்தினருடன் சேர்ந்து வெல்ல முடியாது என சோழன் தயங்குகிறான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் மையம் ‘அதிகாரம்’ தான். தேனி, கம்பம், செஞ்சி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஓவியர் வீர சந்தானம் நடித்த ‘ஞானச் செறுக்கு’ என்ற படத்தை ரண ராஜேந்திரன் இயக்கியுள்ளார். கொரானோ பிரச்சினையால் அப்படத்தை அவர் வெளியிட முடியவில்லை இருப்பினும் திரைப்பட விழாக்களில் அந்தப் படம் பங்கு கொண்டுள்ளது. அடுத்து அவர் இயக்கியுள்ள படம்தான் இந்த ‘யாத்திசை’.
இப்படி ஒரு சரித்திரப் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இயக்கியுள்ளேன். படத்திற்காக தயாரிப்பாளர் நிறைவான அளவில் பொருட் செலவு செய்துள்ளார்,” என்கிறார் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன்.
சோழர்களின் பெருமை பேசும் ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவர உள்ள நிலையில், பாண்டியர்களின் பெருமை பேசும் ‘யாத்திசை’ ஏப்ரல் 21ம் தேதி வெளிவர உள்ளது. அப்போது இரண்டு படங்களைப் பற்றிய ஒப்பீடும் அதிகம் வர வாய்ப்புள்ளது.
‘யாத்திசை’ தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்றது.
இயக்குநர் தரணி ராஜேந்திரன் பேசுகையில், “தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை.
எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள், அதன் பிறகே இந்தப்படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார்.
இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல ஆனால் யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது” என்றார்.
விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், “யாத்திசை சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம்.
அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தின் ட்ரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப்படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. ட்ரெய்லரை விட இந்தப்படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும். ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப்படத்தில் இருக்கின்றது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.
பொன்னியின் செல்வன் – 2 கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘யாத்திசை’ படத்தின் ட்ரைலர் வெளியான பின்பு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சினிமா வணிக வட்டாரத்தில். பிரம்மாண்டமான செலவு, முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பது, என இருந்தபோதிலும் பொன்னியின் செல்வன் – 2 படத்திற்கான எதிர்பார்ப்பு முதல்பாகத்தை காட்டிலும் குறைவாகவே இருந்தது. போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாத நிலையில் பொன்னியின் செல்வன் – 2 படம் தவிர்க்க முடியாத நிலையில் இருந்தது. யாத்திசை திரைப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இராமானுஜம்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கடந்து வந்த பாதை!
பொது இடங்களில் மாஸ்க் : பேரவையில் அமைச்சர் விளக்கம்!