யாத்திசை – ஒரு தொடர்கதையின் தொடக்கம்!

சினிமா

உச்சி வெயில்ல, பொட்டல் காட்டுல, கோட்டு சூட்டு போட்டு போக முடியுமா? இந்த கேள்விக்குப் பதில் சொல்லத் தெரிந்துவிட்டால், தமிழ் திரைப்படங்களில் எங்கெல்லாம் யதார்த்தம் இருக்கிறதென்று சொல்லிவிட முடியும். சில நேரங்களில் உண்மை தெரிந்தும், இந்த இயக்குனரோட யதார்த்த உலகம் இதுதான் போலிருக்கு என்றிருந்து விடுவார்கள் ரசிகர்கள். அவர்களிடம், வரலாற்றுப் புனைவுகளில் யதார்த்தம் இருக்கிறதா என்றால் சிரித்து விடுவார்கள்.

யாத்திசை’ பார்த்தால், அவர்களே நின்று நிதானித்து யோசிக்கக்கூடும். காரணம், இப்படம் காட்டும் உலகம் இதுவரை தீவிர நாடக மேடைகளிலும் இலக்கிய நூல்களிலும் மட்டுமே நிறைந்திருந்த அம்சங்களுக்கு காட்சி வடிவம் தந்திருக்கிறது.

தீவிர இலக்கியம், நாடகம் என்று பேச்சு எழுந்தாலே, சாதாரண ரசிகர்கள் பார்க்கும்படியாகப் படம் இல்லையா என்ற கேள்வி நிச்சயம் வந்து சேரும். அந்த கேள்விக்கான பதில், இந்த விமர்சனத்தின் முடிவில் காணக் கிடைக்கும்.

ஒரு வரலாற்றுப் புனைவு!

ரணதீரன் எனும் பாண்டிய மன்னன் ஒரு மாபெரும் வீரன். ஒரு மலைப்பிரதேசத்தில் அவரது மகனும் ஒரு முதியவரும் உரையாடுகின்றனர். அந்த முதியவர், எயினர் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அப்போது, ரணதீரனைக் கொன்று அவரது கோட்டையைத் தமதாக்க வேண்டுமென்று முயன்ற கொதி எனும் மனிதனின் கதையைச் சொல்கிறார் அந்த பெரியவர்.

தனது வாரிசு அரச பரம்பரையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் எயினர் குடியில் பிறந்த கொதி. அதனைச் செயல்படுத்தும் பொருட்டு, தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளும் சோழத் தலைமையைக் கண்டறிந்து நேரில் சந்திக்கிறார். ரணதீரனிடம் கோட்டையைப் பறிகொடுத்த சோழர்கள் இன்னும் 15 ஆண்டுகளுக்குப் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர். ஆனால், தாம் கோட்டையைக் கைப்பற்றினால் ஓராண்டுக்குப் பிறகு சோழர்களிடம் திரும்ப ஒப்படைத்துவிடுவதாகவும், அதற்குப் பதிலாக எயினர்கள் வரி செலுத்தாத தனி அரசை நடத்த வழிவிட வேண்டுமெனவும் கேட்கிறார் கொதி. அதற்கு, சோழ தரப்பும் சம்மதிக்கிறது.

சொன்னபடியே, எயினர்களைத் திரட்டி ரணதீரன் படையைச் சுற்றி வளைக்கிறார் கொதி. மோதலில் ரணதீரன் தப்பிச் செல்ல, கோட்டையைக் கைப்பற்றுகிறார். மீண்டும் கோட்டை தம் வசம் வர, எயினர்களுக்கு எதிராகப் பெரும்பள்ளி எனும் இன்னொரு பழங்குடியினரின் உதவியை நாடுகிறார் ரணதீரன். அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் அக்குடியின் தலைவி, ஆயிரக்கணக்கில் வீரர்களைத் தந்து உதவுவதாக உறுதியளிக்கிறார். பதிலுக்கு, தம் மகளை மணம் செய்துகொள்ள வேண்டுமெனக் கேட்கிறார். வாரிசுக்கு அரசுரிமை கிடையாது எனும் நிபந்தனையுடன் அதற்குச் சம்மதிக்கிறார் ரணதீரன்.

ஒருபக்கம் பெரும்பள்ளிப் படையுடன் கோட்டையைச் சுற்றி வளைக்கிறார் ரணதீரன். இன்னொரு பக்கம், சோழர்களை வரவழைக்க அனுப்பப்பட்ட சேதி போய்ச் சேர தாமதமாகிறது. இதற்கிடையே, கோட்டைக்குள் இருக்கும் எயினர் வீரர்கள் பொறுமையிழக்க ஆரம்பிக்கின்றனர்; விரைவில் மரணமடைவோம் என்ற அச்சம் பரவுகிறது. இந்தச் சூழலை எயினர் படையை வழிநடத்தும் கொதி எதிர்கொண்டது எப்படி? இறுதியில் வெற்றியைச் சுவைத்தது ரணதீரனா, கொதியா என்று சொல்கிறது ‘யாத்திசை’.

டைட்டிலுக்கேற்ப தென் திசையில் நடந்த அதிகாரத்திற்கான மோதலைச் சொல்கிறது இப்படம். அதேநேரத்தில், இது ஒரு வரலாற்றுப் புனைவு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த கற்பனையை உண்மை என்று எண்ணத்தக்க வகையில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். பணியாற்றிய அனைவரும் அவருக்குத் தந்திருக்கும் ஒத்துழைப்பு, இப்படத்தைத் தனித்துவமானதாக மாற்றியிருக்கிறது.

அபாரமான உழைப்பு!

காடு மேடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது முதல் வெயில் பாராமல் பாறை நிலங்களில் திரிந்தது வரை, மொத்தப் படக்குழுவும் அபாரமான உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

கொதி எனும் பாத்திரமேற்ற சேயோன் படம் முழுக்கத் தென்படுகிறார். அவரது முகபாவனைகளும் வசன உச்சரிப்பும், அந்த பாத்திரத்தை நாயகனாக வரிக்கக் காரணமாயிருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக, ரணதீரனாக நடித்த சக்தி மித்ரன் திரையை ஆக்கிரமிக்கிறார். பெரிதாக உணர்வுகளை வெளிக்காட்டாத அளவுக்கே அவருக்கான காட்சிகள் உள்ளன. மூன்றாவதாக, நம் மனம் கவர்வது தேவதாசிப் பெண்ணாக நடித்த ராஜலட்சுமி. அழுது புரண்டு நடிக்க வேண்டியதில்லை என்றாலும், அவரது முகத்தில் நிரம்பியிருக்கும் வெறுமை அப்பாத்திரத்தின் தன்மையைக் காட்டுகிறது. இவர்கள் மூவருமே புதுமுகங்கள்.

இந்த படத்தில் 100 வயது நிரம்பிய பூசாரியாக வந்து ஆச்சர்யப்படுத்துகிறார் குரு சோமசுந்தரம். பழங்குடியினத் தலைவியாக வரும் சுபத்ராவைச் சமீபகாலமாகப் பல படங்களில் பார்க்க முடிகிறது. இன்னும் சந்திரகுமார், சப்தசீலன், செம்மலர் அன்னம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் பின்னணியில் வந்து போயிருக்கின்றனர்.

அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு காடுகளிலும் குன்றுகளிலும் தவழ்ந்து திரிகிறது. குறைவான பட்ஜெட் என்பது தெரிந்துவிடாத வண்ணம் பல மெனக்கெடல்களைக் கொண்டிருக்கின்றன கேமிரா கோணங்கள் அதுவே, நல்ல சினிமா பார்க்கும் உணர்வை ஊட்டுகிறது.

இன்னும் கொஞ்சம் நிதானத்தைக் கைக்கொண்டிருக்கலாமே என்று எண்ண வைக்கிறது மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு. கதைப்படி, எயினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வசனங்கள் பழந்தமிழ் பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. அவை புரிய வேண்டுமென்பதற்காக, தமிழில் சப்டைட்டில் கூட சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றைப் படிப்பதற்குள்ளாகவே காட்சி நிகழும் இடம் வாய்ஸ் ஓவரில் சொல்லப்பட்டுள்ளது. படத்தைப் பலவீனப்படுத்தும் விஷயங்களில் இதுவும் ஒன்று. அதேபோல, இடைவேளைக்கு முன்பான மோதல் கோர்வையாகக் காட்சிப்படுத்தப்பட்ட உணர்வைத் தரவில்லை.

ரஞ்சித்குமாரின் கலை வடிவமைப்பு, வினோத் சுகுமாரனின் ஒப்பனை, சுரேஷ் குமாரின் ஆடை வடிவமைப்பு மற்றும் சிகை அலங்காரம் எல்லாம் நாம் திரையில் பார்த்த அரச கதைகளில் இருந்து வேறுபட்டிருக்கின்றன. மொகலாயர்களையும் கிரேக்கர்களையும் ஓவியங்களாகக் கண்ட மயக்கத்தில் இருந்து நம்மை விடுவித்து, தமிழ் மண்ணில் அரசர்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்ற சித்திரத்தைக் காட்ட உதவியிருக்கின்றன.

சக்ரவர்த்தியின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை அதிகமும் ஈர்க்கிறது. ஆனால், அது பழந்தமிழர் வாழ்வுக்கு நெருக்கமானதாகத் தோன்றாதது மைனஸ் தான்.

இயக்குனர் தரணி ராசேந்திரன் நினைத்திருந்தால், இந்த படத்தை வேறுவிதமாக உருவாக்கியிருக்கலாம். ஆனாலும், ஒரு சவால் போல மிகச்சீரிய பட்ஜெட்டில் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான ஒரு படத்தைத் தர முனைந்திருக்கிறார். நேர்த்தியான விஎஃப்எக்ஸ், பழமையை ஊட்டும் பின்னணி இசை, பெருமளவிலான நடிப்புக் கலைஞர்கள் மற்றும் திரைக்கதையில் சினிமாத்தனமான அம்சங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ஜனரஞ்சகமான ஒரு படைப்பை நாம் பெற்றிருக்கலாம்.

நல்லதொரு தொடக்கம்!

சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் பழங்குடி அரசுகள் இருந்தனவா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இரு பழங்குடியினங்கள் எதிரெதிராக நிறுத்தப்படுவது கேள்விகளுக்கு இடம் தருகிறது. தம் மகளை மணம் முடிக்கச் சொல்லும் பழங்குடியினத் தலைவியிடம், அவரது வாரிசுக்கு அரசுரிமை கிடையாது என்று பாண்டிய மன்னன் ரணதீரன் சொல்வது சாதி ஆதிக்கமாகக் கருத வாய்ப்புகள் அதிகம்.

போலவே, அரசர்கள் யாராக இருந்தாலும் கடவுளுக்கும் அந்தணர்களுக்குமான இடம் மாறாது என்ற வசனம் பிராமணீயத்தை முன்னிறுத்துகிறது; அதைப் பேசும் பாத்திரம் எயினர் குழு தலைவனால் புறக்கணிக்கப்படுவதாகக் காட்டப்படுகிறது. இவையனைத்தும் சாதி சார்ந்த விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் நிச்சயம் இடம் தரும். அதேநேரத்தில், இன்றைய சமூகச் சூழலோடு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையை ஒப்பிடுவது கண்டிப்பாகப் பொருந்தாது.

இதுநாள் வரை தமிழ் திரையில் குறுநில மன்னர்களும் கூட பேரரசர்களாகவும் பிரபுக்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இதில், போர்க்களத்தில் ஒரு அரசன் எப்படியிருக்க முடியுமோ அந்த எல்லை வரையே பகட்டு மின்னுகிறது. இதுதான் அன்றைய யதார்த்தம் என்று இயக்குனர் முன்வைக்கும்போது, அதனை மறுப்பது அசாத்தியம். காரணம், பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் காட்டுவோர் அதையே தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். ஆடை, அணிகலன்கள், உணவு, வாழ்விட அமைப்பு, படையெடுக்கும் விதம், ஆயுதங்கள் என்று பல அம்சங்கள் நாம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராதவை.

சேர சோழ பாண்டியர்களும் பல்லவர்களும் சைவத்தைப் பின்பற்றியதாகச் சொல்லப்படும் நிலையில், இப்படத்தின் காட்சியொன்றில் ரணதீரன் இஸ்லாமிய முறைப்படி தொழுகை செய்வது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்கிறார். அவரது பாதுகாப்புக்கு கிரேக்கர்களும் அரேபியர்களும் இருப்பதாகக் காட்டப்படுகிறது. இவையனைத்துமே வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பக்கூடும்.

ஒரு திரைப்படமாகப் பார்த்தால், சேயோனின் பாத்திரமே இதில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக, இரண்டாம் பாதி முழுக்க சக்தி மித்ரனின் பாத்திரத்தைச் சுற்றி நகர்கிறது. இடையிடையே சிறு பாத்திரங்களின் எண்ணங்களும் வசனங்களாக விரிகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணும் ஒவ்வொருவருமே நல்லது கெட்டது பற்றிய சிந்தனை இல்லாதவர்கள் எனும் தொனியில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கதை முழுக்க எளிமையான பாத்திரங்கள் நிறைந்திருந்தாலும், எந்த பாத்திரத்தோடு தன்னை ஒரு பார்வையாளர் ஒப்பிட்டுக்கொள்வார் என்ற கேள்விக்குத் திரைக்கதையில் பதில் இல்லை. ஒரு நேர்த்திமிக்க படைப்பாக அமையவில்லை எனும் நோக்கில், இதில் இன்னும் நிறைய குறைகளைக் கண்டறிய முடியும்.

ஆனாலும், ‘யாத்திசை’ நம்மை ஈர்ப்பது நிச்சயம்; அதற்குக் காரணம், இதுவரை நாம் பார்க்காத வடிவிலான கதை சொல்லலும் காட்சியாக்கமும்தான். ‘கேங்ஸ்டர் டிராமா’க்களில் உள்ளது போல, இந்த வரலாற்றுப் புனைவிலும் தனித்தனியாகப் பல பாத்திரங்களை முக்கியப்படுத்தி கிளைக்கதைகளை விவரிக்கலாம். ‘யாத்திசை’யின் முடிவும் கூட, இன்னும் பல கதைகள், பாத்திரங்கள் மீதமிருக்கின்றன என்று சொல்லும் வகையில் உள்ளது. மொத்தத்தில், யாத்திசை ஒரு தொடர்கதையின் தொடக்கம்!

உதய் பாடகலிங்கம்

விஏஒ-விற்கு நேர்ந்த துயரம்: ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

2 ஆண்டுகள் சிறை தண்டனை: ராகுல் மேல்முறையீடு!

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *