நிறைய ‘கத்திரி’ போட்டிருக்கலாம்!
தெலுங்கு, மலையாளப் படங்களில் குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் நடிகைகள் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் படங்கள் அவ்வப்போது வெளியாகும். அவற்றில், அவர்களது சக கலைஞர்கள் சின்னச் சின்ன பாத்திரங்களில் தோன்றுவதும் நிகழும். சில நேரங்களில், சில நாயகர்கள் கூட கௌரவ வேடங்களில் தலைகாட்டுவார்கள். அப்படியொரு நிலைமை தமிழ் திரையுலகிலும் நிகழ்ந்தால் நன்றாக இருக்குமே என்று தீவிர சினிமா விசிறிகள் விருப்பப்படுவதுண்டு.
மலையாள இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி, கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘யானை முகத்தான்’ படம் கிட்டத்தட்ட அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாகவே உள்ளது. ஆமாம், படத்தின் விளம்பரங்களில் யோகிபாபு முன்னிலை படுத்தப்பட்டாலும் இதில் கதை நாயகனாக விளங்குவது ரமேஷ் திலக் தான்.
இந்த ஒரு விஷயமே, ‘யானை முகத்தான்’ படத்தைப் பார்க்கப் போதுமானதாக இருந்தது. ஒரு நல்ல படம் பார்க்கவிருக்கிறோம் எனும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது. அதற்கேற்ப, ரசிக்கத்தக்க படைப்பாக அது இருந்ததா?
கடவுளைத் தேடுபவன்!
கணேசன் எனும் நபர், தினசரி வாழ்வில் தான் எதிர்கொள்ளும் அத்தனை மனிதர்களையும் ஏமாற்றுகிறார்; பொய்களைச் சொல்கிறார்; ஒரு நொடி கூட உண்மையானவராக வாழ்வதில்லை. கடன்களை வாங்கிச் செலவழித்துவிட்டு, திருப்பித் தர முடியாமல் ஏதாவது சாக்கு போக்கு சொல்கிறார்.
அது போன்ற தருணங்களில், தான் வணங்கும் பிள்ளையார் தன்னைக் காப்பாற்றுவார் என்பதே கணேசனின் நம்பிக்கை. அதற்கேற்ப, அவரது வேண்டுதல்கள் அமையும். அதாவது, அவரது திருட்டுத்தனத்திற்குக் கடவுள் துணை நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.
ஒருநாள், கணேசனின் அறையில் இருக்கும் பிள்ளையார் சிலைகள், படங்கள் மறைந்து போகின்றன. அவை இருந்த இடங்கள் வெற்றிடமாகவே அவருக்குத் தெரிகிறது. உடனிருப்பவர்களின் துணையோடு, தனது கண்களுக்கு மட்டும் பிள்ளையார் தெரிவதில்லை என்பதை உணர்கிறார் கணேசன். அதன்பிறகு, பிள்ளையார் இருக்குமிடத்தைத் தேடுகிறார்.
ஒருநாள் இரவு, தனது வீட்டில் பிள்ளையாரை நேருக்கு நேராகச் சந்திக்கிறார் கணேசன். ஆனால், அதனை நம்புவதாக இல்லை. தான் நம்ப வேண்டுமென்றால், விஸ்வரூப தோற்றத்தைக் காட்ட வேண்டும் என்று பிள்ளையாரிடம் கேட்கிறார் கணேசன். அதற்கு, ஒருநாள் மட்டும் உண்மையான மனிதனாக வாழ வேண்டும் என்று நிபந்தனையிடுகிறார் அந்த யானை முகத்தான். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
என்னதான் உருவ வடிவில் கடவுளைத் தேடினாலும், இறுதியில் கணேசனுக்குத் தனிமனித மனமே கடவுள் என்று தெரிய வருகிறது. அதாகப்பட்டது, மனிதத்துடன் சக மனிதர்களை அணுகுவதே கடவுள்தன்மை என்று சொல்கிறது ‘யானை முகத்தான்’. அதற்கு முன்னதாக, பாமரப் பார்வையில் கடவுள் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் விதமாகப் பல வசனங்கள் இதில் உண்டு.
கலக்கும் ரமேஷ் திலக்!
’சூது கவ்வும்’, ‘ஓ மை கடவுளே’ உட்படப் பல படங்களில் தனித்துவம் தெரியும் வகையில் நடித்தவர் ரமேஷ் திலக். அவருக்கு இதில் முதன்மையான வேடம். மனிதர் கலக்கியிருக்கிறார் ஒரு ஜனரஞ்சக நாயகனாகத் திகழ்கின்ற அளவுக்கு கதை இருந்தபோதும், காட்சிகள் அளவுடன் நடிக்கவே வகை செய்திருக்கின்றன.
கருணாகரன், ஊர்வசி, ஹரீஷ் பேரடி, கிரேன் மனோகர் போன்றவர்களுக்கு ரமேஷ் திலக் உடன் அளாவளாவும் வேடம். ஒவ்வொருவருக்கும் ஓவ்வொரு பின்னணி. ஆனாலும், மேடை நாடகம் போல ஏதேனும் ஒரு இடத்திற்குள் நின்றுகொண்டு அவர்கள் பேசுவதுதான் கொஞ்சம் செயற்கையாக உள்ளது.
கதையில் ராணா முகமது எனும் ராஜஸ்தான் மனிதராக வருகிறார் உதய் சந்திரா; அவரது வரவே, ரம்மியமான இயற்கைக் காட்சிகளைக் காண உதவியிருக்கிறது.
இந்த கதையில் கடவுள் குறித்த விளக்கங்களைக் கேட்கும் சிறுவனாக நாக விஷால் நடித்துள்ளார். ஏற்கனவே இவர் ‘கேடி என்ற கருப்புதுரை’ படத்தில் பேராசிரியர் ராமசாமியுடன் இணைந்து நடுத்து ரசிகர்களைப் பிரமிக்க வைத்தவர். இதிலும் இவரது இருப்பு இயல்பாகவே அமைந்துள்ளது.
இந்த படத்தில் பிள்ளையாராக வருகிறார் யோகிபாபு. வசனங்களை உச்சரிப்பதில் அவருக்கென்று உள்ள தனி பாணி இதிலும் தொடர்கிறது. அதையும் மீறி, அவரைக் கடவுளாகக் காட்டுகிறது திரைக்கதை. ஓரிடத்தில் கூட அது அபத்தமாகத் தெரியவில்லை. இது போன்று வேறு கதைகளிலும் யோகிபாபு கௌரவமாகத் தலைகாட்டினால், சிறு சிறு பாத்திரங்களில் நடிக்கும் பல நடிகர் நடிகைகளுக்குப் பிரதான வேடங்கள் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
டைட்டில் காட்சியிலும், ராஜஸ்தான் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக். ஷ்யாலோ சத்யனின் படத்தொகுப்பு, இயக்குனர் வகுத்த காட்சிகளைக் கோர்த்திருக்கிறது; என்றாலும், போரடிக்கும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
எஸ்கேவின் கலை வடிவமைப்பு, ஒவ்வொரு பிரேமிலும் செயற்கைத்தனம் தெரிய வைத்திருக்கிறது. பரத் சங்கரின் இசையில் பாடல்கள் ’பரவாயில்லை’ என்று சொல்லும்விதமாக உள்ளன. அதேநேரத்தில், காட்சிகளில் நிரம்பியிருக்கும் உணர்வெழுச்சியை அதிகப்படுத்த உதவியிருக்கிறது சபீஷ் ஜார்ஜின் பின்னணி இசை.
இயக்குனர் ரெஜிஷ் மிதிலா, மலையாளத்தில் இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய ‘இன்னு முதல்’ படத்தின் ரீமேக் இது. அதனாலோ என்னவோ, தொழில்நுட்பக் கலைஞர்களில் பலர் மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
ஏற்கனவே இதே கதையைக் கையாண்ட அனுபவத்தில், ‘யானை முகத்தான்’ தமிழ்நாட்டிலும் வரவேற்பு பெறும் என்று நம்பியிருக்கிறார் ரெஜிஷ் மிதிலா. கடவுளை வெளியில் தேடுவதை விட, உண்மையான மனிதனாக வாழ்வதே சிறந்தது என்பதைச் சொல்லும் திரைக்கதையே அதற்குக் காரணம். ஆனாலும், அது தெளிவுறச் சொல்லப்படவில்லை என்பதுதான் சோகம்.
இயக்குனரின் குழப்பம்!
கடவுள்தன்மையைப் பேசும் படம் என்பதால் இந்து, கிறித்துவம், இஸ்லாம் என்று மூன்று சமயங்களைச் சேர்ந்த மாந்தர்கள் இக்கதையில் காட்டப்பட்டுள்ளனர். எவ்விதத்திலும் எதிர்விமர்சனங்கள் எழாத அளவுக்கு அதில் கவனம் காட்டியிருப்பது நல்ல விஷயம்.
ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே ‘யானை முகத்தான்’ படத்தின் கதை. அதனை ஜிகினாத்தனம் இல்லாமல் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதாவது, கண்ணால் நேரில் காண்பது போலக் காட்சிகளில் யதார்த்தம் நிறைந்திருக்க வேண்டும். அந்த முடிவை எடுப்பதில் குழம்பியிருக்கிறார் ரெஜிஷ் மிதிலா.
டைட்டில் காட்சியை ரசிக்கும்படியாக வடிவமைத்த அளவுக்கு, ரமேஷ் திலக்கின் தினசரி வாழ்க்கையைச் சொல்லும் இடங்கள் தெளிவாக வடிக்கப்படவில்லை. ராஜஸ்தானில் வாழ்ந்த ஒரு மனிதரின் வீட்டைக் கண்டுபிடிக்க, ஏன் பல இரவுகள், பகல்களைச் செலவழிக்க வேண்டும் என்பதற்கும் உரிய பதில் திரைக்கதையில் இல்லை. பார்வையாளர்கள் தாங்களாகப் பதில்களைத் தேடிக் கொள்வார்கள் என்பது நிச்சயம் ஏமாற்றத்தையே தரும்.
அதேநேரத்தில், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகளில் வசனங்கள் கூர்மையாக அமைக்கப்பட்டுள்ளன. தியேட்டரில் அதற்கு வரவேற்பும் கிடைக்கிறது. அதே வரவேற்பு, ரமேஷ் திலக் – கருணாகரன் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் கிடைக்கும்விதமாகச் செய்திருக்கலாம். தொய்வைத் தரும் காட்சிகளுக்கு ‘கத்திரி’ போட்டிருக்கலாம்.
இது போன்ற குறைகளையும் மீறி, படம் பார்வையாளர்களால் கவனிக்கப்பட யோகிபாபுவே காரணமாக இருக்கிறார். திரைக்கதையில் அவரது இருப்பு, அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை. அதுவே ஆறுதலான அம்சம். கதையோட்டத்தில் தொய்வு ஏற்படாதபடி காட்சிகளைச் செதுக்குவதில் மெனக்கெட்டிருந்தால், ‘அயோத்தி’க்கு இணையான வரவேற்பை இப்படமும் பெற்றிருக்கும். தற்போது, நல்ல கருத்தைச் சொல்கிறது என்ற நோக்கில் மட்டும் கொண்டாட வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.
உதய் பாடகலிங்கம்
’’பாஜக குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள்’’ தமிழிசை
மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி